உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

இருந்தனர் என்பதும் அவர்கள், இறைவனிடம் கூட பொருளும் பொன்னும் போகமும் வேண்டினர் அல்லர் என்றும் அவர்கள் வேண்டியவை அருளும் அன்பும் அறமும் என்றும், அவற்றின் மேல் இறைவன் அடியுறையையே அவாவினர் என்றும், இறைவன் உறைவிடம் வளங்குன்றா திருத்தலையே வேண்டிக் கிடந்தனர் என்றும் நாம் முன்னே அறிந்துள்ள செய்திகளை நோக்கின் இம்முரண் எழுதற்கு இடமில்லை.

இனி இந்நல்லழிசியார் இப்பாடலை அன்றி வேறுபாடல் பாடினாரும் அல்லர்.பரிபாடற் புலவர்களுள் நல்லந்துவனார் ஒருவரையன்றிப் பிறர் பாடிய பாடல்கள் பாட்டு தொகைகளில் இல்லை என்பதும் அறியத்தக்கன. தொகை நூல்களில் இடம் பெற்ற இளவெயினனார், பூதனார் என்பாரும் இப்பரிபாடலில் இடம் பெற்றகடுவன் இளவெயினனார், குன்றம் பூதனார் என்பாரும் அடைமொழிகளாலேயே வேறு வேறானவர் என்பது விளங்கும். ஆகவே இறைவனைப் பாடுதல் அன்றி மாந்தரைப் பாடாத கொள்கையுடைய புலவர்களும் பண்டே இருந்தனர் என்பதும் அவர்கள் வழி பிற்காலத்தே பெருகவும் ஆயிற்று என்பதும் அறிந்து கொள்ளலாம்.