உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

கூடாவாறும் ஆகின்றது. பரங்குன்றச் சுனைகளில் மகளிரும் அவர் தம் தலைவரும் பிற ஆடவர்களும் மகிழ்வுமிக்கு ஒரு சேரப் பாய்ந்து நீராடுதலால் தேனுன்ணும் இயல்புடைய வண்டுகளும் அச்சுனையுள் புகுந்து தேனுண்ணா. அத்தகைய வனப்புடையது திருப்பரங்குன்றம் (17:22-39).

வழிச் செலவு :

கூடலின் சிறப்பையும் ஆங்கிருந்து குன்றத்திற்கு மக்கள் செல்லும் செலவையும் விரிவாகக் கூறுகின்றது பத்தொன்பதாம் பரிபாட்டு.

"கூடலின் வாழ்வார் அறிவுப் போராலும் வெற்றியுடையார்; வீரப்போராலும் வெற்றியுடையார். இரவெல்லாம் இன்பத் துயில் கொண்ட அவர்கள், விடியற் போதின் கண் அறம் பெரிது செய்த பயனால் விண்ணுலக இன்பம் கொள்வதற்குச் செல்வார் போல், தத்தமக்குரிய ஆடை அணிகளைப் பூண்டு குதிரை தேர் முதலியவற்றின் மேல் ஏறி ஊர்ந்தனர். கூடலில் இருந்து குன்றம் வரை நெருங்கி மாலையணிந்த தலைகளே தோன்ற இடைவெளி என்பது இல்லையாகச் சென்றனர். அச்செலவு தக்க மலர்களைத் தேர்ந்து தகவாகக் கட்டி நிலமகளுக்குச் சூட்டிய மாலை போல விளங்கியது.

'கூடலாளும் வேந்தன் பாண்டியன், தன் பரிவாரங் களொடும் மலைக்குச் சென்று திருக்கோயிலை வலம் வந்தான். அக்காட்சி விண்மீன்கள் சூழத் திங்கள் மேரு மலையை வலம் வருவது போல் அமைந்தது.

"வேந்தனொடு வந்தோருள் யானைப்பாகர், யானைகளை வழியில் இருந்து விலக்கி மரங்களில் கட்டினார். அவற்றுக்குக் கரும்புகளை ஊட்டினர். குதிரைப் பாகன் குதிரைகளை வழியில் இருந்து விலக்கி நிறுத்தினர். அவ்வாறே, தேர்ப்பாகர் தேர்களை ஒதுக்கி நிறுத்தினர். இவ்வாறு நிறுத்தப் பெற்ற காட்சி பாண்டியன் பாசறை போல விளங்கிற்று.

எழுத்து நிலை மண்டபம் :

66

'இனிக் கூட்டத்தில் வந்தோருள் சிலர் குரங்குகளுக்குப் பண்டம் வழங்கினர்; சிலர் கருமுக மந்திக்குக் கரும்பு தந்தனர்; சிலர் யாழிசைத்தனர். சிலர் குழலிசைத்தனர்; சிலர் முரசு முழக்கினர்; சிலர் திருப்பரங்குன்றத்தில் இருந்த எழுத்து நிலை மண்டபம் என்னும் பெயரையுடைய ஓவியச் சாலைக்குச் சென்றனர்.