உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

45

"எழுத்து நிலை மண்டபத்தில் ஞாயிறு முதலிய கோள்கள் தீட்டப்பட்டிருந்தன. காமன், இரதி, உருவங்கள் தீட்டப் பட்டிருந்தன. கௌதம முனிவன் சினந்து நின்றதும், அகலிகை கல்லுருக் கொண்டதும், இந்திரன் பூனை வடிவுற்றதும் ஆகிய ஓவியங்கள் இருந்தன. அவற்றை அறிந்தோர் இன்னது இன்னது எனப் பிறர் அறியுமாறு காட்டிச் சென்றனர், இத்தகைய பெருமையுடையது பரங்குன்றம்.

தப்பிப்போன சிறுமி :

ஒரு சிறுமி தன் உறவினரைப் பிரிந்து விட்டாள். அவர்களைத் தேடி மலைப் பகுதியெல்லாம் அலைந்தாள். வந்த வழியையும் மறந்துவிட்டாள். 'அம்மா' 'அப்பா' என்று கூவிக் கூவி அலைந் தாள். அவ்வொலி குன்றிற்பட்டு எதிரொலியாய் எழும்பப், பெற்றோர்கள் தன்னை அழைப்பதாக எண்ணி எண்ணி ஓடித் தேடிக் காணாமல் மீண்டும் மீண்டும் கூவினாள். அத்தகைய மக்கள் திரளும் திகைப்பும் தருவதாக இருந்தது திருப்பரங்குன்றம். மகளிர் :

விளையாடும் மகளிர் சுனையருகே தலைசாய்த்து நின்ற மரத்தின் பூங்கொத்துகளையும் தளிர்களையும் சுனைநீரில் உதிர்த்தனர். அவை சுனையில் இருந்த பூக்களையும் அரும்பு களையும் பொருந்தி அவற்றின் மேல் நீண்டு கிடந்தன. அவற்றுள் ஒன்று ஐந்து தலையுடைய பாம்பு போல் தெரிந்தது. அதன் அருகே கிடந்த பெரியதும் சிறியதுமாகிய அரும்புகள் இரண்டை, அப்பாம்பின் தலைப்பிள்ளையும் இளம் பிள்ளையும் ஆகும் என மயங்கினர்.

மாலைகள் :

சுனைப் பகுதியிலும் பிற இடங்களிலும் பச்சிலைத் தளிரும், செவ்வல்லியும் செங்காந்தளும் பஞ்சாய்க் கோரை மலர்களும், வேங்கை தோன்றி நறவம் கோங்கம் இலவம் ஆகிய மலர்களும் நிறைந்து, நெருங்கிக் கட்டிய தெற்று மாலை போலவும், பல வண்ணப் பூக்களையுடைய கோத்த மாலை போலவும், இடைவெளிப்படத் தொடுத்த மாலை போலவும், பருமையாகக் கட்டப்பட்ட தூக்கு மாலை போலவும் தோன்றுதலால், வைகறையில் பன்னிற முகில்கள் கலந்து விளங்கும் வானம் போலத் தோன்றும்.