உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

35ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் -35

கூடல் பாண்டியனுக்குரியது. பாண்டியனுக்கு ஒரு பெயர் 'சேய்' என்பது. அதனால் கூடல் பரிபாடற் புலவர் ஒருவரால் 'சேய்மாடக்கூடல்' எனப்பட்டது.

குன்றம் பாண்டியன் ஆட்சிக்கு உரியதே. எனினும் செவ்வேள் ஆகிய சேயின் இறை ஆட்சியே தனிச் சிறப்பினது என அப்புலவர்க்குத் தோன்றியது. பாண்டியன் தன் பரிவாரம் சூழச் சென்று வழிபடும் சிறப்பினது அன்றோ பரங்குன்றம்! அதனால், "செவ்வேள் பரங்குன்று என்றார் அவர்,

வாழ்வார்:

மேலே,

கூடலும் குன்றுமாகிய இவ்வீரிடங்களின் மட்டற்ற காதல் கொண்டவர் போலும் அப்புலவர். அன்றியும் அவற்றுள் ஒன்றைத் தம் வாழ்விடமாகக் கொண்டிருந்தவரும் ஆகலாம். அதனால், அங்கு வாழ்வாரே தனிப்பேறமைந்த வாழ்வுடையார் என்றும், அவரே தெய்வ வாழ்வுறுதற்குரியார் என்றும் அப்புலவர் கூறினார். அவ்வளவுடன் நில்லாராய்ப் "பிறரெவர் புத்தேளிர் உலகமாம் தேவருலகம் செல்வார்? எனவும் வினவுகிறார். அப்பாடற்பகுதி:

“ஈவாரைக் கொண்டாடி ஏற்பாரைப் பார்த்துவக்கும் சேய்மாடக் கூடலும் செவ்வேள் பரங்குன்றும் வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார்; மற்றையார் போவாரார் புத்தேள் உலகு!" என்பது அது.

ஏற்பார், ஈவாரைக் கொண்டாடுகின்றனர்; ஈவார், ஏற்பாரைப் பார்த்துவக்கின்றனர். இருபாலும் இன்பம் எய்துகின்றனர். ஈத்துவக்கும் இன்பம் எய்தும் இவ்வாழ்வு இடையறவு படாமல் நிகழ்கின்றது! இன்பமுறுதல் தானே வீடுபேறு. இவ்வுலக வீட்டிலேயே இப்படி இன்புறுவார், அவ்வுலகத்து வீடுபேறு உண்டாயின் இன்பம் அடையத் தவறுவரோ என்னும் உறுதியால் பாடுகின்றார் புலவர். இப்பாடற்பகுதி செவ்வேள் பாடலைச் சார்ந்ததாகவும் இருக்கலாம். பிறபொருள் பற்றிய பாடலைச் சார்ந்ததாகவும் இருக்கலாம். இப்பகுதியும் இவ்வாறே மேலும் ஐந்து உறுப்புப் பகுதிகளும் புறத்திரட்டில் கண்டு பரிபாடல் முதற் பதிப்பாசிரியர் உ.வே. சாமிநாதர் அவர்களால் பரிபாடல் திரட்டு எனத் தொகுத்துவைக்கப்பெற்றன. இவை குன்றமும் கூடலும் என்னும் தலைப்புக்குப் பொருந்துவனவாக அமைதலால் இணைத்துக் கொள்ளப்பட்டன.