உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடற் சிறப்பு:

பரிபாடலில் திருமுருகன்

47

தன்னவன் கூடலை ஒரு தட்டிலும், உலகை ஒரு தட்டிலும் வைத்து, புலவர்கள் தம் புலமை என்னும் துலாக் கோல் கொண்டு நிறுத்தால், உலகத்தின் பெருமை குன்றிப் போகவும் கூடல் பெருமை உயர்ந்து நிற்கும்" என்பதொரு பாடற்பகுதியின் பொருள்.

மற்றொரு பகுதி மதுரை நகரமைப்பை அருமையாகச் சொல்கின்றது :

"தாமரைப் பூவைப் போல்வது மதுரைமாநகர்; பூவின் இதழ்களைப் போல் தெருக்கள் அமைந்துள்ளன; இதழ்களின் ஊடே அமைந்துள்ள பொகுட்டுப் போல்வது பாண்டிய வேந்தன் அரண்மனை; அப்பொகுட்டில் அமைந்த பூம்பொடியைப் போன்றவர் தண்ணந்தமிழ் பேசும் மக்கள் அத்தாமரையின் தேனை அருந்தவரும் வண்டுகளைப் போன்றவர்கள் பரிசில் பெற வரும் மக்கள் புவியைப் படைத்த நான்முகன் நாவிற் பிறந்த நான்மறை ஒலித்தல் கேட்டு இனிய துயில் நீங்குவதை அல்லாமல் சேரனின் வஞ்சிமாநகர் போலவும், சோழனின் உறையூர் போலவும் கோழி கூவுதலால் எழுதல் இல்லாத பெருமையுடையது இப்பாண்டியன் கூடல் நகர்" என்கிறது அப்பாட்டு.

"தமிழ் வழங்கும் நிலப்பரப்பெல்லாம் தன் எல்லையாகக் கொண்ட பாண்டியனின் மதுரை மாநகரின் பெருமை என்றும் குன்றுதல் இல்லாதது; சேய்வாழும் குன்றத்தின் பெருமை யுண்டாயிருக்கும் அளவும், புகழ் பெருகிக் கொண்டேயிருக்கும் இக்கூடல் மாநகரமும்" என்பதொரு பாடற் பகுதியின் செய்தி.

இன்னொரு பாடற் பகுதி "திருமகளின் திலகம் எனத் திகழ்வது கூடல் என்கின்றது."

இன்னொரு பகுதி "கார்த்திகை மகளிர் செவிக்கண் விளங்கும் குழையென்னும் காதணி விளங்குவது போல் விளங்குவது மதுரை என்கிறது.

பாவலர் உள்ளங்களைக் குன்றமும் கூடலும் கவர்ந்திருந்த திறம் இப்பகுதிகளால் இனிது விளங்கும்,