உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. செவ்வேள் பாடல்களில் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும்

இலக்கியம் காலத்தின் கண்ணாடி எனப்படும். அவ் விலக்கியம் என்று தோன்றியதோ அன்று வாழ்ந்த மக்களின் வாழ்வியற் கூறுகளைக் கொண்டு விளங்கும். எந்தக் குமுகாயத்தில் இருந்து கொண்டு ஒருவன் பாடுகின்றானோ அந்தக் குமுகாய வியல் தடங்கள் பதிதல் தானே இயற்கை. ஆனால் அவ்வளவில் நில்லாமல் அக்குமுகாயம் எவ்வகை யால் எல்லாம் சிறப்புற வேண்டுமென அப்புலவன் அல்லது படைப்பாளன் எண்ணு கிறானோ அவ்வகைகளை நேரிடையாகவும் குறிப்பாகவும் காட்டிச் செல்வான். அஃதவன் வரலாற்றுப் படைப்பாளனில் இருந்து உயர்ந்து செல்லும் இடமாகும். இவ்வகையில் செவ்வேளைப் பற்றிவரும் பரிபாடல்களில் அமைந்துள்ள அந்நாள் பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள் ஆகியவை சிலவற்றை அறிந்து கொள்ள வாய்க்கின்றன.

உறைபதி :

தம் ஊரின் மேல் ஒவ்வொருவர்க்கும் பெரும்பற்று இருந்தமை சில பாடல்களால் அறிய வருகின்றது. "பதியெழுவறியாமை" (தாம் பிறந்த ஊரைவிட்டுப் பிழைப்பு நாடி வேறூர்க்குச் செல்லாமை) ஒரு பாடுபுகழாகச் சங்கநாளில் இருந்தது,

தமக்குரிய ஊரின்கண் உறையுமாறு போலச் செவ்வேள் அடியுறை வாழ்வை விரும்பி வேண்டியுள்ள வேண்டுகையினால் இக்கருத்து வெளிப்படுகின்றது:

“செருவேற் றானைச் செல்வநின் அடியுறை

உரிதினின் உறைபதிச் சேர்ந்தாங்குப்

பிரியா திருக்கவெம் சுற்றமோ டுடனே” (18:54-6) என்பது அது.