உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. செவ்வேள் பாடல்களில் சொல்லாட்சி!

சொல்லாட்சி முறை

பாட்டு, தொகை நூல்களில் பரிபாடல் ஒரு தனித் தன்மை யுடையது. இசை வகுத்துப் பாடப்பட்டதாலும் பரிபாடல் என்னும் பாவகையால் அமைந்ததாலும் மட்டும் ஏற்பட்ட தன்று அது. மக்கள் வாழ்வொடு இறைமை கலந்துள்ள இயலை விரிப்பது. அதனால் பிறதொகை நூல்களில் காணவியலாத தொன்மக் குறிப்புகளும் பிற சொல்லாட்சிகளும் இடம் பெற்றுள. இந்நோக்கத்தைக் கருதாமல் ஆய்ந்தார், பரிபாடலை மிகப் பிற்பட்ட காலத்திற்குத் தள்ளினர். எந்நூல்களிலும் காணுதற்கு அரியதாம் அரிய பழந்தமிழ்ச் சொல்லாட்சிகளும் பரிபாடலில் மிகவுண்டு. அவற்றைக் கொண்டு எப்பாட்டுத் தொகை நூல் களுக்கும் ஏற்பட்டது என்று பரிபாடலைக் கூறுவது எவ்வாறு பொருந்தாதோ அவ்வாறே பிற்பட்டது எனலும் பொருந்தாது. எடுத்துக் கொண்ட பாடு பொருளுக்கு ஏற்பப் பொருளாட்சி களும் சொல்லாட்சிகளும் இடம்பெற்றுள எனல் சாலும். பிறசொல் :

கேசவனார் பாடிய பதினான்காம் பரிபாடலிலும், நல்லழிசியார் பாடிய பதினேழாம் பரிபாடலிலும் ஒருசொல் தானும் பிறமொழிச்சொல் இல்லை. குன்றம்பூதனார் பாடியவை ஒன்பதாம் பரிபாடலும் பதினெட்டாம் பரிபாடலும் ஆகியவை. இவற்றுள் பின்னதில் வச்சிரம், சுருதி என்னும் பிறமொழிச் சொற்கள் இரண்டே இடம் பெற்றுள. ஆனால் முன்னதில் சலதாரி, மத்திகை, மார்க்கம். சிகை, கோகுலம், ஆகுலம், வித்தகம், தடாகம், படாகை ஆகிய பிறமொழிச் சொற்கள் இடம் பெற்றுள. முன்னது 85 அடிகளையுடையது பின்னது 56 அடிகளையுடையது. இவற்றை நோக்க ஒரு புலவரே ஒரு பாட்டில் பிற சொற்கள் பெரிதும் கலவாமலும், மற்றொரு பாட்டில் பிறசொற்கள் பல பெய்தும் பாடியமை அறியலாம்.