உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

பொருள் கண்டாலும், அவ்வளவில் பயன்தானே என்னும் உந்துதலால் எழும் ஆய்வே இஃதென்க.

பர் என்னும் அடிச் சொல்லுடன் அகரம் சேரப் 'பர' என்றாம் எனக்குறித்தோம். பர என்பதன் வழியாகவும் விரியாகவும் வரும் சொற்கள் அனைத்தும் பரவுதல்-விரிதல்-அகலுதல்-என்னும் ஒருபொருள் குறித்தே வரக் காணலாம். 'பர' என்னும் சொல்லின்பொருள் பரவுதல் எனின், பல சொற்கள் வேண்டுவ தென்னை எனின், வெவ்வேறு பொருள்களைக் குறிக்கச் சொல்லின் இடையும் ஈறும் வெவ்வேறு திரிபு வடிவங்களை எய்துதல் வேண்டும் என்பது சொல்லியல் நெறிமுறை என்க. இல்லையேல் பொருண்மயக்கம் எத்துணையாம்?

பரிசம், பரிசில், பரிசு என்னும் மூன்றும் 'பர்' என்னும் வேருடன் இகரம் சேர்ந்து வெவ்வேறு வடிவாக நிற்கும் சொற்களாக உள்ளன. ஏன்? இவற்றின் பொருளிலும் நுண்ணிய வேறுபாடு உண்டு என்பதை உணர்த்துதற்கே யாம்.

பரிசம், தலைவன் தலைவிக்குத் தரும் பொருள்; பரிசில், இகலாமல் பெறும் கொடை;

பரிசு, இகலிப் பெறும் பொருள்;

என மூன்றன் வேறுபாட்டையும் சுட்டுவார் பாவாணர். ஆதலால் சொல் திரிதல் பொருள் விளக்கத்திற்காக என அமைக.

பரக்கம் :

விரிவு என்னும் பொருள் தரும் சொல் 'பரக்கம்' என்பது. 'பரக்கப் பார்த்தல்' என்பது குறித்த இடத்தில் ஊன்றி நோக்காமல் அங்கும் இங்கும் பரந்து படப்பார்த்தல். பரக்கப் பார்த்தல், பராக்குப் பார்த்தல் என்றும் வழங்கும். "பராக்குப் பார்த்துக் கொண்டு போய்ப்படியில் விழாதே" என்பது எச்சரிப்பு. ‘பரக்கப் பரக்கப் பார்த்தல்' என்று அடுக்கி வருவதும் வழக்கில் உள்ளதே. இவை விரிவுப் பொருளன என்பது விளக்கமாம்.

பரக்கு :

பரக்கு என்பது பரவிய புகழைக் குறிக்கும். அதனை அழித்தல் ‘பரக்கழித்தல்' எனப்படும்; பரக்கு அழிதல் ‘பரக்கழிதல்' ஆகும். 'பரக்கழி' என்பதும் புகழ் அழிநிலை சுட்டும். இவை இலக்கிய ஆட்சியுடையவை :