உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

ஒரு நிலையில் அமையாமல் விரைவானைப் 'பரக்கா வெட்டி' என்னும் வழக்கம் உண்மையை எடுத்துக் காட்டுகிறது சென்னைப் பல்கலைக் கழக அகராதி. அதன் பொருள், “அதிகமாய் அவசரப் படுபவன்" என்கிறது.

பரக்குதல் :

'பரக்குதல்' என்பரல் பொருளதே. ஓரிடத்தில் நில்லாமல் அலைந்து திரிதல் என்னும் இச்சொல் வழியாகப் 'பரக்கினார்' என்னும் சொல் உண்டாகின்றது. "பரக்கினார் படுவெண்தலையில் பலி" என ஆள்கிறது தேவாரம்.

பரக்குறவை :

மீன் வகையுள் ஒன்று 'பரக்குறவை'. அது மற்றைக் குறவை களிலும் நீளவாளம் உடைமையால் பரக்குறவை எனப்படுகிறது. அது பதின்மூன்று விரலம் (அங்குலம்) வளர்வதும் பச்சை நிறமுள்ளதுமான நன்னீர் மீன் வகை என்னும் செ.ப.க. அகராதி, ‘பரகுரவை' 'பரகொரவை' என்னும் பெயருடையதும் அது என்று அவ்வகர முதலி கூறும்.

பரகு :

பரபரப்பாகத் திரிதல் 'பரகு பரகு' எனத்திரிதல் எனவும், அகலமாகச் சொறிதல் 'பரகுபரகு' எனச் சொறிதல் எனவும் சொல்லப்படும். பாக்கு வெட்டியின் பயனைச் சொல்லும் ஒரு தனிப்பாடல் பரகு பரகு எனச் சொறிதற்குப் பயன்படுவதைச் சுட்டுகிறது.

பரங்கி :

பரங்கி என்பதொரு கொடி; அக்கொடி மிக ஓடிப் பரவும் இயல்பினது. அன்றியும் காயும் பருத்தது. கொடியின் பரவுதல் கொண்டே பரங்கி என்றிருக்க வேண்டும். இனி வெண்ணிறத்தது என்பதால் பறங்கியர் நிறக்காய் என்னும் பொருளால் வருதல் பொருந்துதல் இல்லை. பறங்கியர் நிற ஒப்புமை பரங்கிக்காய் நிற ஒப்புமையொடு பொருந்துதல் இவ்வகையாம். காய் பருத்ததைக் கொண்டு வந்ததெனின், 'பருங்கிக்'காயாக வந்திருக்கும் என்க. மெல்லிய சுணைகளைக் கொண்டு இருத்தலால் 'பூசுணைக்காய்’ என அதன் ஒருவகைக்குப் பெயரிருத்தல் அறியத் தக்கது.