உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

பரப்பு :

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

உலகு பரப்பால் பெரியது என்பது உலகறிந்த செய்தி. அதனால் பரப்பகம், பாரகம், அகல்ஞாலம், கண்ணகல் ஞாலம், மாஞாலம் என எண்ணற்ற வகையால் குறிக்கப்படலாயிற்று.

இவ்வுலகின் நிலப்பரப்பினும் நீர்ப்பரப்பே மும்மடங்கு விரிந்தது என்பதும் உலகறிந்த செய்தி. அதனை உணர்த்துமாப் போல நீர்ப்பரப்புக்குப் 'பரவை' என்றொரு பெயர் சூட்டினர் நம் முந்தையோர்.பரப்பு என்பது நிலப்பரப்பு, நீர்ப்பரப்பு எனப் பொதுமையுடையதாயினும் 'பரப்பு' கடலைச் சிறப்பாகக் குறிப்பதும் ஆயிற்று.

பரந்தகன்ற நீர்ப்பகுதியைப் பரவை என்றதும் பரப்பு என்றதும் தேர்ச்சிமிக்கதாம். ஒரே பார்வையில் பார்க்க முடியாத பரப்பு மிக்கது 'நீர்' என்பதை இச்சொற்கள் சொல்லும் பொருளும் ஒருங்கே குறிப்பது போல், மற்றொரு சொல் குறிப்பாகக் காட்டுகின்றது. அது 'கடல்' என்பது.

கட்பார்வையைக் கடந்து விரியும் விரிவுடைய நீர்ப்பரப்பு கடல் என்க. இக்கடலின் விரிவுப்பொருள் 'இலக்கணக் கடல்' 'இலக்கியக் கடல்' ‘அறிவுக்கடல்' ‘கடலன்ன செல்வம்' ‘நன்மை கடலிற் பெரிது' என்றெல்லாம் ருவகை வழக்குகளிலும் ஊன்றலாயின.

பரவை என்பது நெய்தல் நிலம். அந்நிலத்திற்குரிய மக்கள் பரதவர்,பரவர் எனப்பட்டனர். கடற்பகுதியை ஆட்சி செய்த வேந்தர்கள் 'பரதவ' என்று விளிக்கப் பெற்றனர்.

“கடலொ டுழந்த பனித்துறைப் பரதவ”

என்பது பதிற்றுப்பத்து (48).

இவர் பரதர் எனவும் வழங்கப்பட்டனர் என்பது.

“படர்திரைப் பரதர்”

எனவரும் கம்பர் வாக்காலும், (கார்காலப்.74)

“பரத குமரரும்”

எனவரும் இளங்கோவடிகள் வாக்காலும் (சிலப். 5:158) அறியப்பெறும்.

பரதவர் வேந்தரும், பரதவர் வினைஞருமாக இரு திறத்த வரும் இருந்தனர் என்பதும் அறியக் கிடக்கின்றது.