உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

என்பார் கின்னரர் ஆதலைக் கம்பர் சுட்டுவார் (சித்திரகூடப்

படலம். 11)

பரிச்சாத்து என்பதொருசொல். சாத்து என்பது வணிகக் கூட்டம். வணிகர் தலைவனாக இருந்தவன் மாசாத்தன் எனப் பட்டான்; அவன் கோவலன் தந்தை. குதிரை வணிகம் 'பரிச் சாத்து' எனப்பட்டு, அவ் வணிகத்தில் ஈடுபட்ட குழுவும் ஆகு பெயரால் பரிச்சாத்து எனப்பட்டது.

“வந்தது முதுபரிச்சாத்து”

என்பது திருவிளையாடற் புராணம் (28:29)

பரிகம் பரிகை:

பரிகம் என்னும் சொல்லுக்கு அகழ், மதிலுள் மேடை, வளைதடி ஆகிய பொருள்கள் வழங்குகின்றன.

கோட்டை வளைமதில் ஆதலால், அதனைச் சூழ அமைந்த அகழ் வளைந்து கிடப்பது என்பது வெளிப்படை.

பரி என்பது சூழ்ந்த மதிலைக் குறிப்பதாகி, அதன் மேல் அமைந்த மேடையைப் 'பரிகம்' என்பது குறிப்பதாயிற்று. அகம் என்பது அம்மெனத் தொகுத்தல் வழக்கம். அதன்படி பரியகம் 'பரிகம்' ஆனதென்க.

'உ' என்பது உயர்வு காட்டும் வேர்; உப்பு, உப்புதல், உவணம் என்பவை உயர்வு காட்டுவன. அவ்வாறே உப்பரிகை, உப்பரிகம் என்பவை மதின்மேல் அல்லது மாடிமேல் மாடியைக் குறிப்பதாய் அமைந்தன.

'பரிகை' என்பது வளையும் தன்மையாகலின் வளைதடியைப் 'பரிகம்' எனல் பொருந்துவதே; இனிப் பரிகை என்பதற்கும் அகழ், மதிலுண்மேடை என்னும் பொருள்களும், பரிவு கூர்தலாம் (அன்புறுதலாம்) தன்மையும் கூறப்படுதல் இணைத்துக் காணத் தக்கன.

பரி என்பதற்குப் ‘பரிமரம்' என ஒரு பொருள் உள்ளமை முன்னர்க் கண்டோம். அதன் வளர்ச்சிச் சொல்லாகிய 'பரிகம்' என்பது அதன் வளர்ச்சிப் பொருளுக்கும் உரியதாக விளங்கு கின்றது. அஃது எழுமரம் என்பதாம்.

பரிமரம் ஆகிய அது பரிகம் என்பதையன்றிக் கணைய மரம்,

எழுமரம் எனவும் வழங்கும்.