உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிப்பு :

வேர்ச்சொல் விரிவு

121

பரிப்பு என்பது இயக்கப் பொருளது. வட்ட வடிவாம் ஒன்று இயங்குதல் பரிப்பு எனப்படும். 'வட்ட வடிவாம்' உருளைக் கண்டதே (உருள் - சக்கரம்) போக்கு வரவுக் கால்கோள். கட்டை வண்டி முதல் கடிது பறக்கும் வானவூர்திகாறும் காலுருள் வளர்ச்சியே. அஃது இயற்கையின் கொடை. கதிரும் மதியும் பிறவும் வட்ட வடிவாயிருத்தலும் அவை இடையீடிலாது யங்கலும் தூண்டலாம். அதனை நுண்ணிதின் உணர்ந்தே பரிப்புச் சொல்லை வழங்கினர் நம் முந்தையோர். “செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும், வளிதிரிதரு திசையும், வறிது நிலைஇய காயமும் என்றிவை, சென்றளந் தறிந்தோர் போல என்றும், இனைத்தென் போரும் உளரே' என்னும் புறப்பாடல் (30) அந்நாளைத் தமிழ்வாணர் விண்ணியற்கலைத் தேர்ச்சியை இனிது விளக்கும்.

-

"செஞ்ஞாயிற்றினது வீதியும், அஞ்ஞாயிற்றினது இயக்கமும், அவ்வியக்கத்தால் சூழப்படும் பார்வட்டமும், காற்றியங்கும் திக்கும், ஓர் ஆதாரமும் இன்றித் தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை ஆண்டாண்டு போய் அளந்து அறிந்தவர்களைப்போல நாளும் இத்துணையளவை உடையன என்று சொல்லும் கல்வியை உடையோரும் உளர்" எனவரும் இப்பகுதியின் பழையவுரை கருதத் தக்கது.

பரிபாடல் :

"தெய்வமும் காமமும் பொருளாக வருவது" பரிபாடல்; பரிபாட்டால் அமைந்த தொகை, 'பரிபாடல்' எனப்பட்டது. அது எட்டுத்தொகையுள் ஐந்தாவது.

பரிபாடல் உறுப்புகளுள் சிறந்த ஒன்று ‘அராகம்'. "உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும்" என்பார் தொல்காப்பியர் (செய். 230). முடுகிச் செல்லும் உருளென முடுகு நடையிடலால் பரிபாடல் எனப்பட்டதாம். அதனால் உருட்டு வண்ணத்தை அடுத்தே முடுகு வண்ணத்தையும் வைத்த தொல்காப்பியர்,

"முடுகுவண்ணம், அடியிறந் தோடி அதனோ ரற்றே”

என்றார் (செய். 231). உருளல், சுழலல் வளைதல் பொருளதே யன்றோ?