உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

சொற்கள். அரிசிமணி வேகவைக்கப் பட்டால் அதன் அளவில் பருமன் ஆகிவிடுகின்றது. அதனால் அதற்குப் பருக்கைப் பெயர் வந்து விடுகிறது.

"என்ன உழைத்தும் சோற்றுப் பருக்கைக்கு வழியில்லை" என்று ஏங்குவார்படும் பருக்கைப்பாடு பரும்பாடே! "பருக்கை யிலாக் கூழுக்குப்போட உப்பு இல்லை" என்பதொரு வறுமைப் பாட்டு! இது தனிப்பாட்டு.

பருகல் :

பருகுதல், பருகல் என்பவை பெருவேட்கையால் நீர்குடித்தல்; "பருகுவன் அன்ன ஆர்வம்" என்னும் உவமையே பருகுதல் என்பதன் வேட்டைப் பெருக்கத்தை உரைக்கும். "பருகுவான் போல் நோக்குதல் எவ்வளவு பருத்த நோக்கு! பருகுவன்ன வேட்கையைப் பகர்கின்றது புறநானூறு (207).

"பருகுதல் வேட்கையர்க்கு நீர் தருதல் ஓரறம்; பேரறம். அதனால், "நீர்தான் கொணர்ந்து பருக்கி இளைப்பை நீக்கீரே" என ஆண்டாளார் ஏவுகின்றார் (நாச்சியார் திருமொழி 13:4).

பருசம் :

பரிசம் என்பது பொதுமக்களால் பருசம் எனப்படுவதும் உண்டு. 'விரிசம் பழம்' என்பது 'விருசம் பழம்' என்பது போன்றது அது. ஆனால், இப்பருசம் அப்பொருட்டதன்று. கிணற்றின் நீராழத்தைக் காண்பார் ஓராள் பருசம் ஈராள் பருசம் என்பது நாட்டுப்புற வழக்கம்.

ஆள் பருசம், ஆள் உயரம்; நீரின் நீளத்தை விடுத்து அகலத்தை அல்லது நிலை உயரத்தைக் குறித்தலால் ஒருவகையால் பருமையாம். ஓராள் மட்டம், ஈராள் மட்டம் என்பவற்றில் வரும் மட்டம் திரளல் பொருளதே. மட்டம், மத்தம்; மத்திப்பு, மட்டிப்பு; மத்து, மட்டு என்பவற்றை அறிக.

பருஞ்சு :

பருந்து என்பது 'பருஞ்சு' எனக் கம்பரால் ஆளப்படுகிறது. புரிந்து என்பது 'புரிஞ்சு' எனக் கொச்சையாக வழங்கும் வழக்குப் போல்வது அது. ஆயினும் 'பரு' மாறிற்றில்லை.

“பருஞ்சு இறை” என்பது அது (ஆரணிய. 955).

பருந்துகளின் தலைவனாம் சடாயு எனப்பொருள் காணின் இப்பிரிப்பாம். 'பருஞ்சிறை' பரிய சிறகுகளையுடைய சடாயு எனின் வேறு பிரிப்பாம். இரு வகையாகவும் கொள்வார் உளர். (வை.மு.கோ; கம்பராமாயண அகராதி).