உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியமும் புதிய ஐந்திறமும்

145

இலக்கண இலக்கியப் புலமையில் ஓங்கியவர் என்பதும், சூடாமணி நிகண்டு 11ஆம் பகுதியில் இவர் பாடல்கள் உண்டு என்பதும், வெளிப்பட வாராத இலக்கண நூல்களின் நூற்பாக்கள் பலவற்றைத் தொகுத்து இலக்கணக் களஞ்சியம் என ஒரு தொகுதியாக்கியவர் என்பதும் இக் குறிப்புகளால் விளங்கும்.

இதே காலத் தொடர்பொடு முன்பின்னாக விளங்கிய ஒரு புலவரை இவண் எண்ண எண்ண வேண்டும். அவர், முத்துவீர உபாத்தியாயர் என்பார். திருச்சி உறையூர் சார்ந்தவர். 'முத்து வீரியம்' எனத் தம் பெயரால் ஐந்திலக்கண நூல் ஒன்று இயற்றியவர். பன்மொழிப் புலவர். அமிர்தனார் (1845-1899) சைவசித்தாந்த சண்டமாருதம் சோமசுந்தரனார் (1846). பெரும் புலவர் பிச்சை இபுராகிம் (1836-1908), முதலியவர்களுக்கு ஆசிரியராக விளங்கியவர். இம் முத்துவீரரை இவண் நினைப் பானேன் என்னும் எண்ணம் எழலாம். முத்து வீரர் இயற்றிய முத்திவீரிய இலக்கணத்தொடு ஒப்ப வைத்து நோக்க வேண்டிய ஒரு நூல் பேரகத்தியத் திரட்டு என்பதால் அவரைப்பற்றிச் சுட்ட வேண்டி நேரிட்டதாம்.

முத்துவீரியம் பேரகத்தியம் ஆகிய இரண்டையும் ஒப்பு நோக்குமுன்னர் அகத்தியர் என்பார் பற்றியும் அகத்தியம் பற்றியும் அறிதல் வேண்டுமாம்.

நூல்

நமக்குக் கிடைத்துள்ள இலக்கண நூல்களுள் பழமையும் முழுமையும் அமைந்தது தொல்காப்பியம். அதன் பாயிரம் 'முந்து கண்டு முறைப்பட எண்ணித்' தொல்காப்பியம் செய்யப்பட்ட செய்தியைக் கூறுகின்றது. அதனை இயற்றிய வரும் தொல்காப்பியனாரின் ஒருசாலை மாணவராகிய பனம்பாரனார் என்பதும் அறிய வருகின்றது.

தொல்காப்பியத்தின் பாயிரத்தில் மட்டுமின்றி நூலிலும் அகத்தியம் பற்றிய குறிப்போ. அகத்தியனார் பற்றிய குறிப்போ ஓரிடத்தும் இல்லை.

முந்து நூல் என்பது ஒரு நூல் அன்று; பல நூல்கள்; அவை பலதிறப் பலதுறை நூல்கள்; அவை பல்கிக் கிடந்தமையாலும் அவற்றுள் ஒரு நூலைக் கொண்டோ ஒரு துறையைக் கொண்டோ தொல்காப்பியம் செய்யப்படாமையாலும் இன்ன நூல் எனச் சுட்டினர் அல்லர் என்க.

என்ப, என்மனார், என்மனார் புலவர், மொழிப மொழிமனார் புலவர் என்றும்; நல்லிசைப் புலவர், உயர்மொழிப்