உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

திரிந்த நிலங்கள் என்று மேற்படி அகத்தியச் சூத்திரம் கூறுகிற படியால் இந்தச் சூத்திரத்தை எழுதிய அகத்தியர் கடைச் சங்க காலத்திற்குப் பிற்காலத்தில் இருந்த அகத்தியராதல் வேண்டும். அல்லது அகத்தியர் பெயரால் பிற்காலத்தில் இருந்த ஒருவர் புனைந்துரைத்த சூத்திரமாதல் வேண்டும்.

மயிலைநாதர் மேற்கோள் காட்டுகிற மேற்படி அகத்தியச் சூத்திரத்தில் பல்லவம் என்னும் நாடு தமிழ் திரிந்த மொழி வழங்கும் நாடு என்று கூறப்படுகிறது. பல்லவம் என்பது பல்லவ நாடு. அது தொண்டை நாடு என்றும், தொண்டமண்டலம் என்றும், அருவா நாடு என்றும் வழங்கப்படும். இந்தச் சூத்திரம் பல்லவ நாட்டைத் தமிழ் திரிந்த நிலம் என்று கூறுவது வியப்பாக இருக்கிறது. இவற்றையெல்லாம் ஆராயும்போது இந்த அகத்தியச் சூத்திரம் போலி அகத்தியச் சூத்திரம் என்று கருத வேண்டி யிருக்கிறது." என்கிறார்.

ஆனந்த ஓத்துப் பற்றிய அகத்தியச் சூத்திரத்தைச் சுட்டிக் காட்டும் மயிலையார் "பிற்காலத்தில் அகத்தியர் பெயரினால் சில இலக்கண நூல்கள் இயற்றப்பட்டிருந்தன என்பது தெரிகிறது" என்றும் கூறுகிறார். அகத்தியர் பாட்டியல் கொண்டு சிதம்பரப் பாட்டியல் வந்தது என்று அதன் பாயிரம் கூறினால், அகத்தியர் காலத்திற்கும் பாட்டியற் காலத்திற்கும் என்ன தொடர்பு?

மூதறிஞர் செம்மல் வ.சுப. மாணிக்கனார் அகத்தியம் குறித்துக் கூறும் ஒரு செய்தியை அறிந்துகொண்டு மேலாய்வைத் தொடர்வோம்:

"தமிழிலக்கண வரலாறு எழுதுவோர் அகத்தியம் தொடங்கி எழுதுவது ஒரு மரபாக வந்திருக்கிறது. இது எனக்கு உடன் பாடன்று. தொல்காப்பியத்திற்கு முன்பு இலக்கண நூல்கள் பலவிருந்தன. இதில் ஐயமில்லை. ஆனால் அகத்தியம் என ஒரு நூல் இருந்தது. அதுவே முந்து நூல் எனப் பனம்பாரனாரால் சுட்டப்பட்டது என்ற வழிவழிக் கருத்துக்கு என்னானும் கரியில்லை. ஒப்பிலா மலடி என்றாங்கு, இல்லை என்று சொல்ல வேண்டிய ஒரு நூலுக்கு மகத்துவம் வாய்ந்த அகத்தியம் என்று பெயர் கூறித் தமிழ் இலக்கண வரலாற்றைப் புராணமய மாகத் தொடங்குவதைக் காட்டிலும், காலத்தை வென்று வாழும் தொன்மையான தொல்காப்பியத்தை முதலாவதாக வைத்து இவ்வரலாறு தொடங்கப்படுவதே அறிவு முறை என்பது என் கருத்து என்பது அது. (இலக்கண வரலாறு. அணிந்துரை).