உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியமும் புதிய ஐந்திறமும்

153

இனிப் பேரகத்திய நூற்பாக்களையும் அவற்றின் பொருட் போக்கையும் ஆராயலாம்.

ஆசிரியர் தொல்காப்பியர் நாளிலேயே 'வடசொல்' தமிழில் கலக்கத் தொடங்கியது. செய்யுட் சொல்லுள்ளும் புகலாயிற்று. அதனால் அவ் வடசொல் தமிழில் புகுங்கால் அது தமிழ் இயல்பொடு எழுத்து நிலை பெற்றுப் புக வேண்டும் என விதி வகுத்தார். மொழிக் காவல் கருதியே அவ்விதியை உருவாக்கினார். அதனால் அவர் காலத்திலும் அதற்குப் பின்னரும் வடசொற்கள் தமிழில் புகுங்கால் வடஎழுத்தை விலக்கித் தமிழ் மரபுக்குத் தக வடிவமைத்து எழுதும் நடைமுறை சீர்மையாகப் போற்றப்பட்டது. தொல்காப்பியன் தன் ஆணை கடவா நெறியைப் புலமையுலகம் சிக்கெனக் கடைப்பிடித்தது.

சங்க நூல்களுக்குப் பின்வந்த சிலம்பு முதலிய நூல்களிலும் கீழ்க்கணக்கு நூல்களிலும் இடைக்கால பிற்கால நூல்களிலும் வரவர வடசொற்கள் படிப்படியே பெருக்கமுற்று வந்தன எனினும் எழுத்துக் கலப்பை அவை மேற்கொண்டில.

வடசொல் தமிழில் வருங்கால் இவ்வாறு வருமெனச் சில நூற்பாக்கள் அமைத்துக் காட்டினார் நன்னூலார். சொல்லியல் அவரால் 'பதவியல்' எனவும் பட்டது. அவர்க்குப் பின்னே வந்த வீரசோழியம், பிரயோக விவேகம் என்னும் நூல்கள் தமிழுக்கே இலக்கணம் செய்கிறோம் என்னும் அடிப்படை எண்ணமும் இல்லனவாய் வெளிவந்தன.

வீரசோழியத்தில் வரும் உபகாரப் படலம், தத்திதப் படலம், தாதுப் படலம், கிரியாபதப்படலம் என்பவற்றையும், பிரயோக விவேகத்தில் வரும் காரகப் படலம், சமாசப் படலம், தத்திதப் படலம், திங்ஙப் படலம் என்பவற்றையும் அந்நூற் பெயரையும் அறியவே இவற்றின் வடமொழிப் பெருக்கு வெளிப்பட விளங்கும்.

இவற்றின் விளைவாக, “ஐந்தெழுத்தால் ஒரு பாடை என அறையவே நாணுவர்" என நாணமின்றி இலக்கணக் கொத்துடைய ஈசானதேசிகர் கூறும் வண்ணம் (இப் பேரகத்தியரும் அதனைக் கூறுகிறார்) தமிழ்மொழி தனி மொழியன்று என்னும் கொள்கை உருக் கொண்டது. மணிப் பவழ நடை என்னும் ஒரு நடையும் புகுந்து பெருகித் தமிழை அலைக்கழிக்கலாயிற்று.