உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியமும் புதிய ஐந்திறமும்

167

நெறிப்பட்ட நூலே என்பதை நிலைநாட்டுதற்கு அவர்கள் செய்து வைத்துள்ள சேர்மானங்களையும் ஒட்டு களையும் கட்டுகளையும் ஒருங்கே சிதைத்துக் காட்டினால் அன்றி உலகம் கொள்ளா நிலையில் உள்ளது. கறை ஏற்படுத்தப்பட்ட சுவரில் வண்ணம் தீட்ட வேண்டுமெனின், வண்ணந் தீட்டுவதற்கு மேற்பட்ட பாட்டைக் கறையை அழிப்பதற்கு எடுத்துக்கொள்ள வேண்டும் அல்லவோ? அந்நிலைதான் உள்ளது.

மரபியலிலே இளமைப் பெயர் ஆண்மைப் பெயர் பெண்மைப் பெயர் என்பவற்றைக் கூறிய தொல்காப்பியர்,

"பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே"

என்று கூறி முடித்தபின்

"நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய"

என்பது முதலாக வரும் பதினைந்து நூற்பாக்கள் இடைச் செருகலே என்பது வெளிப்பட்ட அறியக்கிடந்தும், அவ்விடைச் செருகலை அமைத்தற்காகவே புறக்காழனவே, தோடே, இலையே, காயே, நிலந்தீ என வரும் நூற்பாக்களை அவை இருக்க வேண்டிய இடத்தினின்று பெயர்த்துப் பின்னுக்குத் தள்ளித் தம் கருத்துக்கு முடி சூட்டு நடத்த வல்லார் பேரகத்தியப் பொய்ந்நூலை மெய்ந்நூலாக்கித் தொல்காப்பியத்திற்கும் முன்னூல் என நாட்டத் துணிவர் அல்லரோ?

தொல்காப்பியனார்க்கு ஆசிரியராகப் புனையப்பட்ட அகத்தியர் இயற்றியது இப்பேரகத்தியம் என்னின் அதிலுள்ள வடமொழிப் படலம் ஒன்றைக் காட்டியே பாருங்கள் பாருங்கள்! தொல்காப்பியனார்க்கு முன்னரே தமிழும் வடமொழியும் இரண்டறக் கலந்துவிட்டன; அதன் வழிப்பட்டதே இலக்கணம் இலக்கியம் நெடுங் கணக்கு எல்லாம் எல்லாம் என்று தப்புப் பறையறையத் தனிவாய்ப்புத் தந்ததாகிவிடக்கூடும் அல்லவோ?

முத்து வீரியர் இயற்றியது போல, ஏன் பிரயோக விவேக நூலார் போலக் கூடத் தம் பெயரால் நூலாக்கி விட்டால் என்ன கேடு? போற்றப்பட்டால் போற்றப்படட்டும்; தூற்றப்பட்டால் தூற்றப்படட்டும்; அறிவு பெற்றிருந்தும் ஒளிந்து விளையாடும் இழிந்த இந்நிலையை எதற்காகத்தான் கொள்ள வேண்டுமோ?