உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியமும் புதிய ஐந்திறமும் க

189

இவ்விருபதாம் நூற்றாண்டில் ஆக்கிக் கொண்டது அன்றோ நூற்பா என்பது.

"பல்திறப் பொருளைப் பாங்குற விளக்கிச்

சில்வகை எழுத்திற் றிறநிலை காட்டித்

திட்பமும் நுட்பமும் செப்புவ நூற்பா'

என்பதிலுள்ள நூற்பா என்னும் சொல்லாட்சியே வழுக்கிவிட்டுக் காலைவாரிக் குப்புற தள்ளுகிறதே ! ஈதென்ன?

மயளார் நூல்தானா? அன்றிக் கருமாரிதாசர் வீரபத்திரர் மயனாக உருமாறி இயற்றிய நூல்தானா?

வீரபத்திரனார் இயற்றிய நூலென்றால் காலம், சொல்லடைவு, பொருள் போக்கு ஆயன பற்றியெல்லாம் நாம் கருதி இடர்ப்பட வேண்டியதில்லை. மயனார் நூல் என்றும் தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நூல் என்றும் சொல்லும் போதல்லவோ வாராச் சிக்கல்கள் எல்லாம் வருகின்றன.

தொல்காப்பிய வழியே தமிழுக்கு வாய்த்த அடைமொழி ஒன்றே. அது செம்மை என்பதாம். செந்தமிழ் என்பதையன்றி நாம் இந்நாளில் தமிழுக்கு வழங்கிவரும் அடைமொழி எதனையும் தொல்காப்பியத்தில் காணற்கு இல்லை. ஆனால் அவர் காலத்திற்கு முன்னவராகக் கூறப்படும் மயனார் ஐந்திற நூலில், தென்மொழி, முதன்மொழி வருகின்றன. செந்தமிழோடு தண்டமிழும் வருகின்றது. அம்மட்டோ?

ஐந்தியல் தமிழ், ஒளித் தமிழ், கோலத் தமிழ், செழுந் தமிழ், தெள்ளு தமிழ், தெளி தமிழ், முழுத் தமிழ், விண்டமிழ் எனப் பலப்பல அடைகள் மிடைய நடையிடுகின்றதே ஐந்திறம். இது காலப் பழமைச் சான்றா? இந்நாளைப் புதுமைச் சான்றா?

தமிழ் இலக்கணம் முக்கூறுபட்டது என்பதை எவரே அறியார்? தொல்காப்பியம் எழுத்தும் சொல்லும் பொருளும் அமைந்த நூல்தானே ! இறையனார் களவியல் உரைகாரர் காலத்தில் அன்றோ யாப்பு என்பது தனியே எண்ணப்பட்டு நான்கு கூறுபட நடந்ததாகிய செய்தி உள்ளது. அதன் பின்னர் அன்றோ அணியென ஒன்றும் எண்ணப்பட்டு இலக்கணம் ஐந்தென நடையிடலாயிற்று. இவ்வாறாக மூலப்பழமை நூலாம் ஐந்திறத்தில் ஐந்திலக்கணக் கூறுபாடு அமைந்துளது எனின் (செய்தி எதுவும் இல்லை; பெயர் மட்டும்) அந்நூல் மூலப்பழ நூலன்று.பிற்படு நூல் என்பதே வெளிப்படையல்லவோ !