உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

இதோ, ஆசிரியர் நச்சினார்க்கினியர் கூறுகிறார்: "தென் திசைக்கட் போதுகின்ற அகத்தியர், கங்கையார் உழைச்சென்று காவிரியாரை வாங்கிக் கொண்டு, பின்னர் யமதக்கினியா ருழைச் சென்று அவர் மகனார் திரண தூமாக்கினியாரை வாங்கிக் கொண்டு” வந்தார் என்கிறார். இஃதுண்மை எனின், அகத்தியனாரைப் போலவே தொல்காப்பியனாரும் முதலூழிக் காலத்தவரே எனக் கொள்ளல் வேண்டும்.

தொல்காப்பிய எழுத்ததிகார நச்சினார்க்கினியத்தைச் செவ்விதிற் பதிப்பித்த புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர் எழுதிய தொல்காப்பியர் வரலாறு, அவர் காலம் பற்றிக் கூறுகிறது. "சமதக்கினி புதல்வர் என்றதனாலே பரசுராமர், தொல்காப்பியர் சகோதர ராவார் என்பது(ம்) பெறப்படும். இராமாயணத்துள்ளே பரசுராமர் இராமரோடு போரை விரும்பிச் சென்று அவருக்குத் தோற்றதாகவும் அவருக்கு மிக முந்தினவராகவும் அறியப்படுதலினாலும் இராமராற் சீதையைத் தேடும்படி அனுப்பப்பட்ட குரங்குப் படை இடைச் சங்கமிருந்த கபாடபுரத்தை யடைந்து சென்றதாக அறியப்படுதலினாலும், இடைச்சங்கப் புலவர்களாயிருந்தோர் அகத்தியரும் தொல் காப்பியரும் முதலாயினோர் என்று இறையனாரகப் பொருளுரை முதலியவற்றான் அறியப்படுதலினாலும் தொல்காப்பியரும் இராமர் காலத்துக்கு மிகமுந்தியர் என்பதும், தொல்காப் பியரிலிருந்து பல்லாயிரம் ஆண்டுகள் சென்றன என்பதும் அறியத்தக்கன.

ஆயினும், இக்காலத்துச் சரித்திர ஆராய்ச்சிக்காரருட் சிலர், மூவாயிரம் ஆண்டு என்றும், ஆறாயிரம் ஆண்டு என்றும், இப்படிப் பலவாறாகக் கூறுகின்றனர். தொல்காப்பியப் பொருளதிகாரப் பதிப்பாளர் இராவ்பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள், அப்பொருளதிகாரப் பதிப்புரையில் பன்னீரா யிரம் ஆண்டுகட்குக் குறையாதென்று கூறியிருக்கின்றனர். தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய சுப்பிரமணியபிள்ளை அவர்கள் கி.மு. 700 ஆண்டுகளுக்குப் பிற்படாது என்கிறார். எவ்வாறு கூறினும்

இவர் காலம் 12000 ஆண்டுகளுக்கு மிக முற்படும் அன்றிப்பிற்படாது" என்பது அது.

அடியார்க்கு நல்லார், மாகீர்த்தியாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் என்கிறார். நச்சினார்க்கினியர், பாண்டியன் மாகீர்த்தி என்றதுடன் அவன் இருபத்து நாலாயிரம் ஆண்டு வீற்றிருந் தான் என்றும் கூறுகிறார்.