உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியன் நெறிமுறை - அகல்

7

முடியின் சுற்றளவு 938 அடி; உயரம் 85 அடி; நிலத்தில் ஊன்றிய விழுதுகள் 464; அது நிற்கும் நிலப்பரப்பு 1 1/2 ஏக்கர்.

"சத்தாரா" மாவட்டத்தில் 'வைசத்கர்' கிராமத்தில் ஒரு மரம் கி.மே. 442 அடி; தெ.வ.595 அடி; முடியின் சுற்றளவு 1587 அடி இருந்தது என்றும், "ஏழாயிரம் மக்கள் தங்கக் கூடிய ஒருமரம் 'நருமதை' ஆற்றுத்திட்டு ஒன்றில் இருந்தது" என்றும், "இருபதினாயிரம் மக்களுக்கு நிழல்தரக்கூடிய மரம் ‘ஆந்திராப்' பள்ளத்தாக்கில் இருந்தது" என்றும் அறியப்படுகின்றன.

- கலைக்களஞ்சியம்

ஆலமரம் நிழல் கருதி வளர்க்கப் பெறும் மரம். ஆகலின் தனியார் தம் நிலத்து வைத்துப் பெரும்பாலும் வளர்ப்பது இல்லை. அது பொதுமரமாகவே எங்கும் வளர்க்கப் பெறுவ தாயிற்று. அன்றியும் இறையுறை கோயிலாகவும், பொதுமக்கள் கூடும் மன்றமாகவும் விளங்கிற்று. அதன் பெயரால் பண்டு தொட்டு இன்றுவரை விளங்கிவரும் ஊர்கள் எண்ணற்றவை.

ஆலங்குடி வங்கனார், ஆலந்தூர் கிழார், ஆலம்பேரி சாத்தனார் என்னும் சங்கச் சான்றோர் ஊர்ப் பெயர்கள் ஆலொடு விளங்குவனவாம். 'ஆலஞ்சேரி மயிந்தன்' என்பான் 'ஊருண் கேணி நீரே போல' உதவியாளனாக இலங்கியதையும் 'அம்பர் நாடன் ஆலங்குடிக்கோன்' என்பான் பேராண்மை சிறக்க விளங்கியதையும் வரலாற்றால் அறிகிறோம். ஆலங்குளம், ஆலடிப்பட்டி இன்னவாறாக ஊர்கள் இந் நாள் விளங்குபவை

மிகப்பல.

றைவன், 1. ஆலமர் கடவுள், 2. ஆல்கெழு கடவுள், 3. ஆலமர் செல்வன், எனப் பெறுவதும், 'ஆலந்தளி' 'ஆலக் கோயில்' என்னும் பெயர்கள் உண்மையும் ஆலுக்கும் இறைக்கும் உள்ள தொடர்பினைப் புலப்படுத்தும். ஆலமரத்துறை இறைக்குப் பூப்பலி, புனற்பலி முதலியன இடப்பெறுதலை, "நெடுவீழ் இட்ட கடவுள் ஆலத்து உகுபலி' என உரைக்கும் நற்றிணை (343). ஆலங்காடு பெற்ற தெய்வப் புகழும், ஆலங்கானம் பெற்ற வீரப் புகழும் நாடறிந்தவை. ஆல், ஊர் மன்றமாக விளங்குவது இன்றும் காணக்கூடியதே. 'ஆலின்கீழ் இருந்து அறமுரைத்த' செய்தி தொன்மங்களில் (புராணங்களில்) கண்டதே.

இனி, அகல் என்பதன் வழியாகத் தோன்றிய வேறொரு சொல்லைக் காண்போம்.