உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

ஆல்-ஆலி-நீர்:

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

தீயின் தன்மை மேல்நோக்கி எரிவது; நீரின் தன்மை கீழ்நோக்கிப் பாய்வது. கீழ்நோக்கிப் பாய்வதுடன், அகலப் பரவுதலும் அதன் தன்மையாம்.

பாய்தல் என்பதன் பொருள்தான் என்ன? பா, பாய், பாய்தல், பாய்ச்சுதல், பார், பார்வை, பரவுதல், பரவல், பரவை, முதலியன வெல்லாம் அகலுதல் (பரவுதல்) பொருளால் வந்த சொற்களே. நீருக்கு இயற்கையான அகலுதல் தன்மையை நுனித்து அறிந்த முந்தையோர் அதற்கு, 'அகல்' என்றும் 'அகலி' என்றும் பெயரிட்டனர். அப் பெயர்களே பின்னாளில் 'ஆல்' என்றும் 'ஆலி' என்றும் வழங்கலாயின.

.

'ஆலின் மேலால் அமர்ந்தான்' என்பது ஈடு (திருவாய். 9.10:1) இது நீர் என்னும் பொருள் தந்தது. ஆல், வெள்ளம் என்னும் பொருள் தருதலை மாறன் அலங்காரம் குறிக்கும் (262).

'ஆல்' என்பதற்கு 'நீர்' என்னும் பொருள் உண்மையை வழக்கின் வழியே காண்போம்.

நீர்ப்பதனுடைய தவசத்தையோ, தட்டை தாள்களையோ உலர்த்துதற்கு வெயிலில் காயப் போடுதலை 'ஆலாற்றுதல்' என்பர். அப் பொருள்களில் உள்ள நீர்ப்பதத்தை அகற்றுதல் என்பதே ஆலாற்றுதல் என்பதாம். இப்பொருள் காணாமையால், அச் சொல்லை அகரவரிசை நூல்கள் 'ஆல்வாட்டு'- உலர்ச்சி; ஆல்வாட்டுதல்-சிறிது காயச் செய்தல்; ஆல்வாடுதல்-சிறிது காய்தல்; ஆலாட்டு-ஆல்வாட்டு, ஆலவாட்டு-வெயிலில் வாட்டுகை" என்று குறிப்பிடுகின்றன. அகற்றுதல் என்பதே 'ஆற்றுதல்' என்று ஆகியது என்பதை மேலே காண்போம்.

ஆலாய்ப் பறத்தல் என்பதோரு சொலவடை நாட்டில் வழங்கப் பெறுகிறது. ஆலாய்ப் பறத்தல் என்பது என்ன? பேராசைப்பட்டுப் பேயாய் அலைவாரையே 'ஆலாய்ப் பறக்கிறார்' என்கிறோம். பறத்தல் என்பதால் அஃதொரு பறவை என்பது தெளிவாம். அப்பறவையின் பெயர் 'ஆல்' என்பதாம். அப் பறவைபோல் பறப்பதையே உவமையால் கூறப்பெறுகிறது.

'ஆல்' 'ஆலா' என வழங்கப் பெறும் பறவைக்கும் நீருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறியின் வியப்பு உண்டாகும். ஆலாப் பறவைகளில் ஒருவகை, கடற்பகுதியில் வாழ்வது;