உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியன் நெறிமுறை - அகல்

9

கழுகுபோன்றது; அதன் கழுத்து, தலை, மார்பு, வயிறு, வால் ஆகியவை வெளுப்பும், உடலின் மற்றைப் பகுதிகள் கருஞ்சிவப்புமாக இருக்கும்.

இது, கடல்மேல் இளைக்காமல் சளைக்காமல் நாளெல்லாம் சிறகடித்து வட்டமிட்டுப் பறக்கும்; பெருங் கூச்சலிட்டுக் கத்தும், இணைசேரும் காலங்களில் மற்றைக் காலங்களைவிட மிகுதியும் பறந்து அலைந்து கூக்குரலிடும்.

மற்றொரு பறவையும் 'ஆலா' என்றே வழங்கப்பெறுகிறது. அதற்கு 'ஆற்றுக் குருவி' என்பதொரு பெயரும் உண்டு. தகைவிலான் குருவி (தயிலாங்குருவி) என்பதும் இப்பறவையே. தண்ணீருக்குள் மூழ்கி, முழுமையாய் மறைந்து போய்பின் வெளியே வரும். தண்ணீருக்கு மேல் இங்கும் அங்கும் பறந்து அலகைக் கீழ் நோக்கி வைத்துக்கொண்டு மீன் கூட்டம் வருவதைப் பார்த்துச் சட்டென மூழ்கிப் பிடிக்கும். இது மரத்தில் தங்குவது இல்லை. தண்ணீர்க் கரையிலேயே இருக்கும். நீருக்கும் இதற்கும் உரிய தொடர்பே 'ஆலா' என்னும் பெயரை இதற்குச் சூட்டிய தாம். இனி, இப் பறவையின் தகைப்பு இலாப் பறத்தல் சிறப்பு உணர்ந்தே 'தகைவு இலான்' என்னும் பெயரிடப் பெற்றது என்பதும் அறிக. தகைவு-தகைப்பு; தகைப்பாவது இளைப்பு.

நீர் மட்டத்தில் ஒழியாமல் அலைந்து திரியும் இப் பறவை 11,000 கல் தொலைவுகூட 'வலசை' போகும் என்பர். இதன் இயல்பினை முழுதுற அறிந்த நுண்ணறிவால் பெயர் சூட்டியுள்ள பெற்றிமை நினைதோறும் இன்பம் தரும்.

தமிழ் வளர்த்ததும் புலவர் அவையம் பொலிந்ததும் ஆகிய பழமதுரைக்கு 'ஆலவாய்' என்பதொரு பெயருண்மை அறிவோம். திருவிளையாடற் புராணத்தில் 'திருஆலவாயான படலம்' என்பதொரு படலமும் அதுமுதல் நூன்முடிய அமைந்த பெரும் பகுதியுடைய திருவாலவாய்க் காண்டம் என்பதொரு காண்டமும் உள்ளமை எவரும் அறிந்ததே. பாம்பின் வாயால் எல்லை காணப்பெற்ற நகராகலின் மதுரை ‘ஆலவாய்' எனப்பெற்றது என்பதைத் திருவிளையாடல் விரிக்கின்றது. 'ஆலம்' என்பதற்கு 'நஞ்சு' என்னும் பொருள் உண்மையால், அதன் வழியாகப் பாம்புக்கு ஆகிப் 'பாம்பின் வாய்' எனப் பொருள் பெற்று, அவ் வாயால் எல்லை காட்டப் பெற்ற ஊருக்கு ஆயிற்று என்னும் கதை வளர்ந்தது.