உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

'ஆல்' என்பதற்கு 'நீர்' என்னும் பொருளுடைமை அறிந்தோம். வாய் என்பது இடப் பொருட்டு ஆதலைக் கண்வாய், கால்வாய், கயவாய், தத்துவாய், இல்வாய், ஆல்வாய், வாய்த்தலை என்பனவும் தலைவாயில், குடவாயில், குண வாயில் முதலிய ஊர்ப் பெயர்களும் காட்டும். அன்றியும் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்த்தும் என்பதும், அதன் உருபுகளுள் 'வாய்' என்பதும் ஒன்று என்பதும் இவண் அறியத் தக்கதாம். அறியவே, 'ஆலவாய்' என்னும் பெயர் மதுரைக்கு ஆகிய வகை புலப்படும்.

"நளிகடல் முன்னியது போலும் தீநீர் வளிவரல் வையை வரவு;

வந்து மதுரை மதில் பொரூஉம் வான்மலர் தாஅய் அந்தண் புனல்வையை ஆறு"

என்பது பரிபாடல் (12), இதில் வையையாறு பெருக்கெடுத்துக் கடல்போல் வருவதும், வந்து மதுரை மதிலை முட்டிக்கொண்டு செல்வதும் குறிக்கப்பெற்றுள. இக் காரணத்தால் 'ஆலவாய்' எனப் பெயர் பெற்றது உண்மையாகவும், பின்னே புதுக்கதை கண்டு பழவரலாறு புதையுண்டு போயிற்று என்க. ஆலவாய்க் குரிய இப்பொருளில் ஐயுறுவார் உளராயின் 'திருச்சீரலைவாயை நினைவாராக.

வான் சிறப்பும் மாமழை போற்றுதலும் கண்டது தமிழகம். மழையை 'மாரி' என்பர். மாரி வழிபாடு மழை வழிபாடே! மாரியின் பெயர்களுள் ஒன்று முத்துமாரி என்பது. இது முத்துப்போன்ற மழைத்துளி என்னும் பொருள் தரும். மழைத் துளியை முத்துக்கு உவமை காட்டுதல் இலக்கியங்களில் பெருவழக்குடையது. முத்துமாரி என்பது போல மாரிக்கு அமைந்த மற்றொரு பெயர் 'முத்தாலம்மன்' என்பது. 'முத்து ஆலம் அம்மன்' என்னும் முச்சொற் கூட்டே இப்பெயர். இங்கு 'ஆலம்' என்பது நீர்க்கட்டியே. முத்தாலம்மன் என்னும் பெயர் பெருவழக்காக இருந்தும் அதன் பொருள் உணராராய்த் திருத்தம் செய்வார் போல ‘முத்தாரம்மன்' ஆக்கிக் கொண்டு வருகின்றனர். அதுவே திருந்திய வடிவம் என்றும் மகிழ்கின்றனர். 'முத்துமாலை அணிந்தவள்' எனக் காரணம் கண்டு 'முத்துமாலை' எனவும் பெயர் சூட்டிக் கொள்கின்றனர். இவற்றால் இப் பழஞ் சொற்பொருள் மூடுண்டு போதலை அறிக.

1. திருச்செந்தூர்; 'அலைவாய்க்கரை' என்பதும் ஓர் ஊரே.