உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியன் நெறிமுறை - அகல்

11

'ஆலவாலம்' என்பது ஒரு சொல். இது வயலையும், பாத்தியையும் குறிக்கும். நீர்வளமிக்க நெடும் பாத்தியே 'ஆலவாலம்' எனப்பெறும். 'வாலம்' நெடுமை என்னும் பொருள் தருதல் இன்றும் வழக்கில் உள்ளதேயாம். வாலமாக நீண்டுள்ள நிலம் 'வாலி' என்று வழங்கப் பெறுகிறது. துணி நீளமாகக் கிழிந்துபட்டால் 'வாலமாகக் கிழிந்து விட்டது' என்பர்.

'ஆலத்தி எடுத்தல்' என்பதொரு வழக்கம் உண்டு. அது மங்கல வினையாகக் கருதப் பெறுகிறது. ஆலத்தி எடுத்ததை "மரமொடு மரம் எடுத்தார்" (ஆலம்-அத்தியும் மரப் பெயர்கள் அன்றோ) என்றார் ஒரு புலவர். நீரைச் சுற்றி அல்லது சுழற்றி எடுப்பதே ஆலத்தி எடுத்தலாம். மஞ்சள், அரிசி, மலர் முதலியன கலந்த மங்கல நீரால் சுற்றுதலே ஆலத்தி எனல் அறிக. அதனை அப்பொருள் விளங்க 'ஆலாற்றி' எடுத்தல் எனப் பெயர் சூட்டினர். பின்னே அச்சொன்மூலம் அறியாராய் 'ஆலத்தி, ஆலாத்தி' என அகர வரிசை நூல்களும், பிற நூல்களும் வழங்கியுள்ளன. ஆற்றுதல் சுழற்றுதல், சுற்றுதல் என்னும் பொருட்டது. இதனை 'ஆலத்தி வழித்தல்' என்கிறது ஈடு (1.89)

ஆல் நீர் ஆதலால் ஆலில் துயில்பவன் எனப்பெறும் திருமால் 'ஆலவன்' எனப் பெற்றான். திங்கள் தண்ணியது ஆகலின் அத் தன்மை விளங்க அதுவும் 'ஆலவன்' என வழங்கப் பெற்றது. 'ஆலல்' என்பதற்குரிய பொருள்களுள் தூங்குதல் (தொங்குதல்) என்பதும் ஒன்று. ஆதலால் தலைகீழாகத் தொங்கும் தனித்தன்மையுடைய வௌவால் 'ஆலாலம்' எனப் பெற்றது. நீர்வேட்கையைத் தணிப்பதும், நீர்ப்பதன் மிக்கதும், நீர்க்குச் சுவையூட்டுவதும், வறண்ட நிலத்தும் வறண்ட காலத்தும் வளமாக வளம் தருவதும் ஆகிய நெல்லியை 'ஆலகம்' என, ஆய்ந்த அருமையால் பெயரிட்டனர். இவற்றையெல்லாம் வடசொல் மூலங்காட்டி வழக்கம் போல் மகிழ்வார் மகிழ்ந்தனர்.

ஆலம் - குற்றாலம்:

நீர்ப்பொருள் தரும் 'ஆலம்' என்னும் சொல்லுக்கு 'குறு' என்பது அடையாய்க் 'குற்றால'மாகியது. நெல்லை மாவட்டத்துக் குற்றாலமும், தஞ்சை மாவட்டத்துக் குற்றாலமும் நாடறிந்தவை. இவற்றுள் முன்னது, தன் செஞ்சொற்செவ்வி மாறாமல் குற்றால மாகவே திகழப், பின்னது குத்தாலமாகியது. அன்றியும் குற்றாலம் என்பது பிழைவழக்கு என்றும், குத்தாலம் என்பதே செவ்விய வழக்கு என்றும் ஆராய்ச்சியாளரும் கூறுவாராயினர்.