உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

தொல்காப்பியர் வாழ்வு முடிவு எல்லையாகவும் கொள்ளலாம். இதற்கு ஓர் அரிய சான்று உளது.

இலங்கை வரலாறு கூறும் முதற்கடல்கோள், தென்னில மாகிய குமரிக் கண்டத்தில் இருந்து அல்லது இந்திய இணைப்பில் இருந்து இலங்கையைப் பிரித்த காலத்தது. இரண்டாம் கடல்கோள் பாண்டுவாசா என்பார் காலத்தில் (பாண்டிய அரசர்) ஏற்பட்டது. இப்பாண்டுவாசா என்பார் நிலந்தரு திருவிற் பாண்டியன் எனக் கொள்ளத்தகும். இடைச்சங்க அழிவு அவனொடும் தொடர்புடையதாக வரலாறுகள் அனைத்தும் கூறுவதாகலின். ஆதலின் அக்காலமே தொல்காப்பியர் காலமும் ஆம் என்பது.

உள்ள சான்றுகள் மாறவும் கூடும். மேலும் வலிய சான்றுகள் வாய்க்கவும் கூடும் வேறு வகை முடிபு சீராக வாய்க்குமெனின் இக்கணிப்பைப் புறம்தள்ளித் தக்க முடிவை ஏற்பதும் ஆய்வுச் சால்பாம். எப்படியும் ஒரு மெய்ம்மை கண்டு நிலைப்படுத்த வேண்டும் என்பதே ஆய்வாளன் நோக்காக இருக்கவேண்டும். அந்நோக்கு எமக்கு ஏற்றது மட்டுமன்று, எவர்க்கும் வேண்டுவதாம். இதனைப் பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு நிலைநாட்டும் சான்று கிட்டின் அதனைக் கண்டார் கொண்ட மகிழ்வு எமக்கும் உண்டாம்.

இவ்வகையால் கி.மு.504 இல் பாண்டுவாசா காலத்தில் ஏற்பட்ட கடல்கோள் இடைச்சங்க அழிவாய் அமைந்து தொல்காப்பியர் காலத்தைத் தீர்மானிக்க உதவுகிறது. அக்காலத்தின் மேலெல்லை கி.மு.594 தொட்டுக்கீழெல்லை கி.மு.504 ஆகலாம். இயல்பான தொண்ணூறு வயது என்பது இயலாதது அன்றாம்.

இனி ஆண்டு வரையறையொடு நாள் வரையறை ஒன்றும் வேண்டுவது கட்டாயமாம்.

வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்னும் வழக்குக்கு இழுக்கும் உண்டோ என்னும் தாயுமானக் கொள்கை உலகம் ஒத்த பழநெறியாம். அதனாலேயே அவ்வக்கால வல்லார் வகுத்துத்தந்த ஆண்டு திங்கள் நாள் செய்தி என்பவற்றை அவ்வக்கால அரசும் ஆர்வலரும் வழிஞரும் ஏற்றுப் போற்றினர். அவையே இக்காலத்து நாம் ஏற்றுப் போற்றும் ஆண்டுமானமும் வரலாற்றுமானமும் ஆம். இவ்வகையில் அறிஞர்களொடு ஆளுபவர்களும் ஒத்திணைந்து முடிபு எடுத்து நாடு ஏற்று நடைப்படுத்த வைத்தல் வழிவழி வழக்கம்.