உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம்

251

ஆண்டுப் பிறப்பெனச் சிறக்கச் செய்தவர் எவ்வெவரும் போற்று தற்குரியராம்.

தைந்நாள்! பொங்கல் நாள்! தமிழர் தனிப்பெரு விழா நாள் அது. அந்நாள் ஏறுதழுவுதல் விழா; இன்று வரை தொடரும் சான்று நாள்; உழவர் உழைப்பாளர் பட்ட பாட்டின் பயன் என விளங்கும் கூட்டமுத விழா பொங்கல்விழா!

இது பழையதா? புதியதா?

பொங்கல் வாழ்த்து வாழ்த்து விடுத்தல் புதுவது; முக்கால் நூற்றாண்டுப் புதுமையது தொடங்கியவர் கா.நமச்சிவாயர். பொங்கல் விழாவோ உழவன் தொடங்கிய உழவின் தொடக்கம் தொட்டது. வித்தியது விளைந்ததா? களம் வந்தது களஞ்சியம் சேர்ந்ததா? அவன் வாழ்வில் பூரிப்பு ஏற்பட்டது. அப்பூரிப்பின் அடையாளம் பொங்கல் விழா! அறுவடைத் திருவிழா!

பொங்கல் என்பதன் உணர்வுப் பொருள், மகிழ்ச்சி பொங்கும் கடலைக் கண்டவன், அருவி பூரித்து விழும் இடத்திற்குப் பொங்கு மாகடல் என்றே பெயரிட்டான். பூத்துக் குலுங்கும் சோலைக்குப் பொங்கர் என்றே பெயரிட்டான். புது மழையைப் பொங்கல் மழை என்றான்.

அவன் கண்ட பொங்கல் ஒப்புரவுப் பொங்கல். அறுவடை ஆக்கம் அனைவரையும் அடைந்து, ஆடிப்பாடிக் கூடிக் குலவி மகிழவைக்கும் பொங்கல் ஆயிற்று. குழவியர் முதியவர் காளையர் கன்னியர் என அனைவரையும் புத்துடை உடுத்திப் பொலிவோடு விளங்கச் செய்யும் விழா வாயிற்று. ஆடவர்க்கும் மகளிர்க்கும் கலை விழாக் கோலம் ஆயிற்று! தலைவிழாவாம் கோலமும் தமிழர்க்கு ஆக்கிற்று. அந்நாளை ஆண்டுப் பிறப்பெனல் இந்நாளில் அதற்கு வாய்த்த முடிசூட்டு விழா. பொங்கலில் பால், அரிசி, பருப்பு வகை, பழவகை, இனிப்பு, ஏலம், கிராம்பு, சுக்கு, நெய் எனப் பலவும் இணைந்து பொங்கி, தன்தன் சுவையை விடாமல் பொதுவுக்குச் சுவையாக்கி ஒன்றற்கு ஒன்று சுவையாய் ஒப்புரவு ஆக்கும் படையல் விழா. பலப்பலரும் கூட்டுண்டு மகிழும் குடும்ப நல நாட்டு நல விழா! அன்று எல்லார்க்கும் எல்லாம் என்னும் இனிய சூழலில் கதிரோனுக்கு எடுக்கும் பொதுமை விழா அது.

-

அப்பொங்கல் நாளை அடுத்த நாள், மாட்டுப் பொங்கல் நாள். அது நன்றியறிதல் விழா! ஆன்ம நேயம் பெருக்கு நாள்.