உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியர் காலம்

257

சிலப்பதிகாரம், சூளாமணி, பெருங்கதை, திருநூல் இன்னவும் யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை, நன்னூல் முதலியவும் இயற்றினர். அவர்கள் செய்த தமிழ்த் தொண்டு கி.பி.இரண்டாம் நூற்றாண்டு தொட்டு ஏற்பட்டவையே.

ஐந்திரம்

இந்நிலையில் ஐந்திரம் உணர்ந்த தொல்காப்பியர் அருகராம் வர்த்தமானர்க்கு முற்பட்டவராம். விண்ணவர் கோமான் விழு நூல் கற்றவர் மகாவீரர் என்பது வரலாறு. ஐந்திரம் கி.மு. நான்காம் நூற்றாண்டளவில் வழக்கற்றதாகிப் பாணினியமே பயில் வழங்குதல் அறியப்படுகின்றது. பாணினிக்கு முற்பட்டவர் தொல்காப்பியர். ஆதலால் காலக்கணிப்பின்படி அவர் சமணர் அல்லர்; அந்நாள் மகாவீரர் தோன்றினார் அல்லர். அவர்க்கு முன்னவர்களோ பெயர் அளவில் தொடராக அறியப் படுபவர்களேயாம்! அது சமணர் வரலாறே அன்றித் தமிழர் வரலாறு அன்றாம்.

சமண நூன் மரபு

இனிச் சமண சமயத்தார் நூன்மரபு, முக்குடை, பிண்டி, அச்சுதன் என்பன இல்லாமல் இயல்வது இல்லை. இவை தொல்காப்பியத்தில் இல்லை. சமய அழுத்தம் உடைய ஒருவர், இலக்கணமாயினும் சரி, இலக்கியமாயினும் சரி, இயற்றுங்கால் அவர்தம் வழிபாட்டு நெறி, கொள்கைக் குறி இல்லாமல் இருப்பது இல்லை. தூய தமிழ்ப் பெயராக இருப்பதும் இல்லை. 'இளங்கோ' இளவரசப் பெயரேயன்றி சமயப் பெயரன்று. அவர் தமிழ்ச் சமணராக விளங்கியவர். நெடுஞ்சேரலாதன், செங்குட்டுவன் என்பார் பெயர்களோடு எண்ணின் விளக்கமாம். அத்தகையவரே கொங்குவேள் முதலிய சிலர்.

தமிழ் மரபு

பழமையான தமிழ் மரபுகளைக் காக்க நூல் செய்த தொல்காப்பியர் தமிழ் நெறியராகவும், தமிழ் மீக்கூர்ந்த பற்றுமையும், காவல் கடனும் பூண்டவராகவும் இருந்தமையால், அவர் அயல் நெறியர் ஆகார்!

அவர் வடவெழுத் தொரீஇ, வடசொற்கிளவியைத் தமிழ் மரபில் எழுத வேண்டும் என்று ஆணையிடுவது கொண்டே, அவர் வேத வழியர் அல்லர் என்பது போல், சமண நெறியர் அல்லர் என்பதும் தெளிவாம். ஏனெனில், வேற்றுச் சொல்லும், வேற்று எழுத்துத் தழுவலும் சைவம், வைணவம் முதலிய பெயர்களாலேயே புலப்படும்! சமணம் பௌத்தம் என்பனவும்