உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

எனப் பாண்டிவேந்தன் கவல வாய்க்கப் பெற்றதாகக் கூறப்படும் பொருள் இறையனார் களவியலேயாம். அது என்ன கூறிற்று எனின் 'தமிழ் கூறிற்று' என்பது மறுமொழி. (விடை) ஆரிய மன்னன் பிரகத்தனுக்குத் 'தமிழ் அறிவிக்கக்' கபிலர் பாடிய நூல் குறிஞ்சிப்பாட்டு! குறிஞ்சியாவது புணர்தலும் புணர்தல் நிமித்தமும் ஆம்! இவை மற்றை மொழியரும் சமயத்தரும் காணாத தமிழ் நெறியவையாம். பொருள் இலக்கணம் என்பது தமிழர் வாழ்வியல் இலக்கணம் என்பது தேர்ந்து தெளிந்த முடிபு. புறத்திணை

போர் வேண்டாப் பொறுமை நெறி, ஐம்புலன் ஐம்பொறி வெல்லும் வீரமே வீரம் என்பவை சமண நெறி வர்த்தமான மகாவீரர் சிறப்பே புலனைந்தும் வென்ற வெற்றியர் என்பதாம். இனி அகப்பொருளோ சமணர் பாராட்டும் சிறப்புப் பொருளன்று. ஆதலால், தொல்காப்பியர் சமண சமயத்தர் அல்லர் என்பது வெளிப்படை

மகளிர்

இனி மகளிர்க்கு வீடுபேறு இல்லை என்பது சமணக் கொள்கை. பிற இனத்தரினும் சமணப் பெண்டிர் கற்று வல்லாராய் புலமை மிக்காராய் இருப்பினும் ஆடவர்க்கொப்ப மதிக்கப்படுவது இல்லை. ஆனால் தொல்காப்பியர் சொல்லும் கிழவன் கிழத்தி, தலைவன் தலைவி, இல்லறம், துறவு என்பவை தனிப் பெருஞ் சிறப்பின.

துறவு

இல்லறத்தை மேற்கொண்டு துய்ப்பன துய்த்து மக்களைப் பெற்று அவர்களைத் தக்கவர்கள் ஆக்கி, சுற்றத்தார் சுற்றப்பட அறநெறியாளராய் வாழ வழிகாட்டி வாழ்வின் நிறைவில் மக்கள் சுற்றம் பாராட்டத் தக்க வகையில், பெற்ற பெருமையர் ஆகிய அவர்கள் நிறை கடன் செய்த நேயமிக்காராய்த் துறவு மேற்கொள்வர். தனித்துறவு பற்றித் தொல்காப்பியர் சொன்னார் அல்லர். ஆதலால் இல்லற மாளிகையின் மேல் எடுக்கப்பட்ட மாடி தமிழர் துறவாம்!

“காமம் சான்ற கடைக்கோட் காலை

ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே”

என்பது அந்நூற்பா (கற்பியல்.51)