உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

“எரிவிடம் முறையே ஏறித்

தலைக் கொண்ட ஏழாம் வேகம்

தெரிவுற எயிறும் கண்ணும்

மேனியும் கருகித் தீய்ந்து

விரிவுரை குழறி ஆவி

விடக்கொண்டு மயங்கி வீழ்வான்’

(அப்பூதி. 27)

எனவரும் சேக்கிழாரடிகள் வாக்கால் நஞ்சுண்டான் உடல் உறுப்புகள் கருவண்ணம் கொள்ளல் கண்டுகொள்க. 'ஆலகோலத்தின் நஞ்சு' எனத் தேவாரம் வெளிப்படக் காட்டலும் கொள்க. 'ஆலகோலம்' என்பது கருநிறம்.

சிவம், சிவல், சிவலை, கரி, கறுப்பு, காவி, துவரை, மஞ்சள், வெள்ளை என்பன வெல்லாம் வண்ணப் பெயரே தம் பெயராய்ப் பொருள் பொதிந்த சொற்களாய் விளங்குமாப் போல, 'ஆலம்' என்பதும் வண்ணப் பெயராய் நஞ்சினைக் குறித்ததாம்.

இஃது இவ்வாறாக, இதன் மூலமும் இயற்கையும் அறியாராய் வட சொல்லாக்கி மயக்கினர்; மயங்கியோர் தம் மயக்கக் குற்றம் உணராராய், மையல் கொண்டு வேரினும் முந்து நின்று கட்டியங் கூறிக் களிப்பும் கூர்ந்தனர். இதனால், ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் கூறல் போல், ஒரு சொல்லுக்குக் கண்ட தவறுபட்ட மூலக்கூறு, பல சொல்லுக்குத் தவறுபட்ட மூலங்காட்ட முந்தும் என்பதை மேலும் காண்க; பிற கட்டுரை களானும் கண்டுகொள்க.

ஆலி-கள்-தேன்:

இன்னும், ஆலி என்பதற்குக்கள், தேன், தேனீ, காற்று, பூதம் முதலிய பொருள்களும் உண்டு என்பதை அகரவரிசை நூல்களிலும், நிகண்டு நூல்களிலும் காணலாம். இப்பொருள் களுக்கும் 'ஆலி' என்பதற்கும் உள்ள தொடர்பினைக் காண்டலும் வேண்டுவதே.

ஆலி என்பது மழை, மழைத் துளி, நீர்ப் பெருக்கு, முதலிய வற்றைக் குறித்தமையால் அவ்வாறே துளித்தும், வழிந்தும், பெருகியும் செல்லும் கள்ளையும் தேனையும் குறித்தலாயிற்றாம். ஆயின், இப் பொருள்கள் பின்னை விரிந்த விரியேயன்றி முன்னை மூலத்தின் அமைந்தது அன்றாம். ஆகலின், இச் சொற்பொருள் ஆட்சி பிற்கால நூல்களிலேயே இடம் பெற்றுளது என்க.

ச்