உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியன் நெறிமுறை - அகல்

"பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து'

"கார்க்கரும்பின் கமழாலை"

என்பவற்றைக் காண்க.

25

(சிலப். 10-151)

(பட் 9)

'அழி' என்பது வைக்கோலைக் குறிக்கும்; "உழுத நோன்பகடு அழி தின்றாங்கு" என்றும் (125) "உழவொழி பெரும் பகடு அழிதின் றாங்கு" என்றும் (366) புறப்பாடல்கள் 'அழி' வைக்கோல் ஆதலை விளக்கும்.

'அழி' கரும்புக்கு ஆதலை, 'பொங்கழி ஆலை' என்னும் சிலப்பதிகாரத் தொடரால் (10.151) அறியலாம்.

வைக்கோலைக் குறிக்கும் 'அழி'யினின்று கரும்பாகிய இவ் வழியை விலக்குதற்கு, மிக நயமாக அரும்பத உரையாசிரியர் இதனைத் 'தூற்றாப் பொலி' என்றார். அடியார்க்கு நல்லாரும் 'தூற்றாப் பொலி'யையே ஏற்று அமைத்தார். தூற்றும் பொலி ஆலி, நெற்களம் என்பதையும், தூற்றாப் பொலி ஆலை, 'கரும்படு களம்' என்பதையும் குறித்தமை கொள்க. 'அழி' என்னும் சொல்லுக்குக் கரும்புப் பொருள் உண்மையை அகரவரிசை நூல்கள் இனிமேல்தான் ஏற்றுப் போற்றுதல் வேண்டும்.

ஆலைச் செய்தியைக் காணும் நாம், இவ்விடத்தில் 'சிற்றாலை' என்று ஊர்ப்பெயரும், 'செக்காலை' என இடப் பெயர்களும் உண்மை அறிதல் நலமாம். செக்கில் எண்ணெய் எடுத்தலை ஆலைத் தொழிலாகக் குறிக்கப் பெறுதல், 'ஆட்டுதலால்' வந்தது எனக் கொள்க. ஆலையடித்தல், ஆலை ஆட்டுதல், ஆலை ஒட்டுதல், ஆலைக்குழி, ஆலைத் தொட்டி என்பன வெல்லாம் கரும்பாலை தொடர்பாக வளர்ந்த சொற்கள். 'ஆலை பாய்தல்' என்பது மனச் சுழற்சி என்னும் பொருளில் வள்ளலாரால் வழங்கப்பெறுகின்றது. (விண். 406)

இனி, யானை கட்டும் கூடத்திற்கு, 'ஆலை' என்னும் பெயருண்டென்று புறப்பாட்டு ஒன்றால் புலப்படுகின்றது.

"பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு புரந்த

பெருங்களி றிழந்த பைதற் பாகன்

அதுசேர்ந் தல்கிய அழுங்கல் ஆலை

வெளில்பா ழாகக் கண்டுகலுழ்ந் தாங்கு'

என்று "கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானுழைச் சென்று மீண்டு வந்து உறையூர் கண்ட பொத்தியார் அழுது பாடிய பாட்டில் அவ் அரிய ஆலைச் சொல் உள்ளமை காண்க.

55