உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

யானை கூடத்திற்கு 'ஆலை' என்னும் பெயர் உண்மை யைப், "பெரிய சோற்றை யுண்டாக்கிப் பல்யாண்டு பாதுகாத்த பெரிய களிற்றை இழந்த வருத்தத்தினையுடைய பாகன், அவ் வியானை சேர்ந்து தங்கிய இரக்கத்தையுடைய கூடத்தின்கண் கம்பம் வறிதே நிற்கப் பார்த்துக் கலங்கின தன்மைபோல" என இதற்குப் பழைய உரைகாரர் உரை வரைந்தமை கொண்டும் தெளிக.

யானைக்குரிய பெயர்களுள் 'நால்வாய்' என்பதும் ஒன்று. 'தொங்குகின்ற வாயையுடையது' என்னும் கரணியத்தான் அமைந்தது அப் பெயர். தூங்கல் என்பது மற்றொரு பெயர். ஓய்வின்றி இப்பாலும் அப்பாலும் தலையை அசைத்துக் கொண்டே இருத்தலால் யானைக்கு வந்த பெயர் இது. வஞ்சிப்பாவின் ஓசை 'அசை நடையது' ஆகலின், 'தூங்கல் இசையன வஞ்சி' என்றார் அமிதசாகரர் (யா. வி. 90). அசை தலையுடைய யானை நிற்கும் இடமாகலின் அப் பொருள் தழுவி யானைக் கூடத்திற்கு ஆலைப் பெயரை அமைத்துக் கொண்டார் பொத்தியார் என்க.

ஆலயம்:

'ஆலை' என்னும் சொல் 'அம்' என்னும் சாரியை பெறும்போது யகர உடம்படு மெய்யும் பெற்று 'ஆலையம்' என்று ஆகும். ஐகாரத்திற்கு அகரம் போலி ஆகலின் 'ஆலையம்' ஆலயம் ஆகும்.

கோயில், கோட்டம் என்பவை ஆலயமாதற்கு நெடு நாள்கள் ஆயின. கோயில் விரிவடைந்தது; மண்தளி, கல்தளியா யாது; யானைகட்டும் மாலும் திருச்சுற்றும் கொண்டு திகழ்ந்தது. இந்நிலையில் ஆலயம் என்னும் அருமைப் பெயர் ஏற்றது.

யானைகட்டும் மால் 'ஆலை' எனப்பெறுதல் புறப்பாட லால் அறியப்பெற்றது. ஆலல் என்பதற்குச் சுற்று சுழற்சிப் பொருள்கள் உண்மையும் அறிந்ததே. ஆகலின், யானை கட்டும் மால் உண்மையாலும், திருச்சுற்று உண்மையாலும் கோயில் 'ஆலயம்' ஆயிற்றாம். பெரிய கோயில்களுக்கு அமைந்த அப் பெயர் பின்னே பொதுப்பெயராய் எல்லாக் கோயில்களுக்கும் வழங்கலாயிற்று. 'ஆலை' வழியே ஆலயம் வந்தது என்பதில் ஐயுறுவார் உளராயின் அவர், சுற்றாலை, திருச்சுற்றாலை என்பவை கோயில் திருச் சுற்றுகளைக் குறிக்கும் என்பதைக் கல்லெழுத்தைக்