உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லியன் நெறிமுறை - அகல் ஓ

29

என்பதும் காண்க. அவ்வாறே, அறிவு 'உள்ளொளி' என்பதும் ஏனைக் கதிர்களும் பிறவும் 'புறவொளி' என்பதும் அறிக.

ஒளி அகல அகல (விரிய விரிய) இருள் அகலும் (ஒடுங்கும், நீங்கும்) என்பதும், அவ் வகற்றுதலே உலகை உய்விக்கும் என்பதும், ஒரு கொம்பில் பழுத்த நல்ல கனியும் நச்சுக்கனியும் போல அகற்சியும் அழிவும் உள என்பதும் இச்சொன் மூலம் கொண்டு தெளிக.

அகற்றுதல்-ஆற்றுதல்:

அகற்றுதல் என்னும் சொல் ஆற்றுதல் எனத் திரியும். அதன் அகரக் குறில் நெடிலாக நீண்டு ககரம் கெட்டு முற்கூறிய விதிப்படியே ‘ஆற்றுதல்’ என அமையும். அகற்றுதல் பொருண் மையே, ஆற்றுதல் பொருண்மையாயும் நிலைக்கும்.

வெந்நீர், காய்ச்சுப்பால், தேநீர் முதலியவற்றை ஆற்றிக் குடிக்கிறோம். இவற்றில் ஆற்றுதல் என்பது என்ன? நீரிலும் பாலிலும் தேநீரிலும் இருந்த வெப்பத்தை வேண்டும் அளவுக்கு 'அகற்றுதலே' தணித்தலே - ஆற்றுதலாம் என்பது வெளிப்படப் புலப்படும் தெளிவான செய்தி.

ஒருவர் நோய்வாய்ப் படுகின்றார். அவர்தம் நோயை நோய்கூறு அறிந்து அகற்றவல்ல மருத்துவர் தக்க மருத்துவத்தால் அகற்றுகிறார். ஆதலால் அதுவும் ஆற்றுதலாகும்.

இனி, ஒருவர் அல்லல்பட்டு, ஆற்றாராய் அலமருகின்றார். அவர்தம் அல்லலை அவரே தம் தெளிவால் அகற்றிக்கொள்ள மாட்டாராய்த் துன்புறுகிறார். இந்நிலையில் உளவியல் அறிந்து உற்றுழி உதவும் உழுவலன்பரோ மனநோய் மாற்றவல்ல திறம் வாய்ந்த அறிஞரோ அவர்தம் மனத்துயரை அகற்றுகின்றார். அதுவும் ஆற்றுதலேயாகும்.

இவற்றால் அன்றோ தம் துயரையும் பிறர் துயரையும் தணிக்கும் திறம் இலாரை "ஆற்றமாட்டாதவர்' என உலகம் பழித்து ஒதுக்கவும் இழித்துரைக்கவும் துணிகிறது. ஆற்ற மாட்டாதவரை, 'ஆற்றாமாக்கள்' என்றும், 'ஆற்றாதார்' என்றும் இலக்கியமும் கூறலாயிற்று.

"ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணையாகி”

மணி. 17.64; 1935