உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

உட்கொளல் உயிரிகளின் இயற்கை; உயிர் வாழ்வுக்கு இன்றியமையாதது உட்கொளல். பருப்பொருள், கூழ்ப்பொருள், நீர்ப்பொருள், ஆவிப் பொருள் எனப் பல்வகைப்பொருளும் உட்கொளற்குரியவை. காட்சிப்பொருள் கருத்துப்பொருள் என்பனவும் உட்கொளற்குரிமைப்பட்டவை. இவ் வுட்கொளல் கருத்துப்பற்றிய சொற்களை எண்ணுங்கால் தமிழ்ச் சொல்வளம் தெளிவாக விளங்கும். அதே பொழுதில் இங்குச் சுட்டப்பெறாத சிலவும் ஆய்வார்க்குத் தோன்றக்கூடும். அச் சொற்கள் ஆய்வாரை மேலும் வியப்பில் ஆழ்த்தும்.

அசைத்தல் முதலாக விழுங்குதல் ஈறாக அகர வரிசையில் 102 சொற்கள் இவண் காட்டப் பெற்றுள்ளன. இச் சொற்களின் தழுவுசொற்கள் சிலவும் சுட்டப்பெற்றுள்ளன. இவற்றை விளக்கு தற்கென அமைந்த சொற்களும் சில உள. 'பதம்' என்னும் ஒரு சொல்லுக்குமட்டும் இலக்கணச் சான்றன்றி இலக்கியச் சான்று சுட்டப்பெறவில்லை. மற்றவையனைத்தும் இயன்ற அளவில் ருவகை வழக்குகளாலும் விளங்கப்பெற்றன.

சில சொற்கள் ஒத்தனபோல் தோன்றினும் அவற்றுள் நுண்ணிய வேறுபாடுண்மை குறிக்கப் பெற்றுள்ளன. கறித்தல் கடித்தல்;உதப்புதல் குதப்புதல் குதட்டுதல் காண்க.