உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாசிரியர் முன்னுரை

'செந்தமிழ்ச் சொல்வளம்' என்னும் பெயரிய இந்நூல் பழந்தொகுப்பும் புதுத்தொகுப்பும் கூடியது. பழந்தமிழ் இலக்கண இலக்கிய வழக்குகளையும் இந்நாளை உலகியல் வழக்குகளையும் தன்னகத்துக் கொண்டது. நிகண்டுகள், அகராதிகள் ஆகியவற்றின் தொகுப்பில் உள்ளவையும், அகராதிகளில் இடம் பெறாதவையும் கொண்டது. வட்டார வழக்காக இருப்பனவும்கூட இடம் பெற்றது!

"உட்கொளல் என்னும் பொருளில் அமைந்த சொற்களை, உங்கள் நினைவில் இருந்து சொல்லுக" என்றால், "உண்ணல், சாப்பிடல்,தின்னல், குடித்தல், பருகல், அருந்துதல் போன்றவை தாமே' என்பர். ஆம்! இவைபோல்வனவே! இன்னும் சில சொல்லுங்கள்" என்றால், “கடித்தல், விழுங்குதல், கறித்தல், கொறித்தல்" என மேலும் சில சொல்வர். ஆனால், உட்கொளல் பொருளில் 102 சொற்கள் உண்டு என்றால், 'இத்தனையா? வ்வளவு சொற்கள் இருக்கின்றனவா?' என வியப்பர்!

நூற்று இரண்டு சொற்கள் என்பது மேலெல்லை இல்லை; மேலும் சொற்கள் இருக்கலாம்; இத் தொகுப்புக்கு வாராமல் விடுபட்டிருக்கலாம். அவற்றையும் தொகுப்பின் - பலர்பலர் துணையுடன் தொகுப்பின் - இன்னும் எத்துணையோ சொற்கள் கிட்டும்! "இவற்றை அறியாமலும், இணைக்காமலும் விட்டு விட்டோமே" என்னும் ஏக்கம் உண்டாகும்! இத்தகு அரிய பெரிய முயற்சிக்கு உரியது, தமிழ்ச்சொல் தொகுப்புப் பணியாகும்.

மின்னல்போல் சில சொற்கள் நினைவில் பளிச்சிடும்; எவரெவரிடமோ உரையாடும்போதும், எவ்வெந் நூல்களை யோ படிக்கும்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தோன்றும்! அறிந்த சொல்லாகவோ புதுச் சொல்லாகவோ இருக்கவும் கூடும். இச் சொல்லைப் பிறகு குறித்துக் கொள்ள லாம் என்று. நம்மேல் உள்ள அழுத்தமான நம்பிக்கை யால் இருப்போம்! ஆனால் அச் சொல்லோ ஏய்ப்புக்காட்டும் குழந்தைபோல மெல்ல நழுவி மறைந்துவிடும்! 'குறிக்கத் தவறி விட்டோமே! என்று, இடையிடையே நினைவுக்குக் கொண்டுவர