உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. உட்கொளல் கருத்துச் சொற்கள்

1. அசைத்தல் -மேலும் கீழும் அல்லது இடமும் வலமும் அசைத்தல் அசையாகும். ஆடு மாடுகள் அசை போட்டு உண்ணல் அசைபோடல்' 'அசையிடல்' எனப்பெறும். அசைபோட்டுத் தின்னும் ஆவைத் தலைமாணாக்கர்க்கு உவமைப்படுத்தும் நன்னூல் புல்கண்ட இடத்துத் தின்று நீர்கண்ட இடத்துக்குடித்து நிழல் கண்ட இடத்துப் படுத்து அசைபோடுவது ஆவின் இயல்பாம். தின்ற உணவை மீண்டும் வாய்க்குக் கொண்டு வந்து மென்று உள்ளே இறக்குதலை ‘அசைமீட்டல்' என்பர். மீட்டும் மெல்லுதலை 'அசைவெட்டல்' என்பர். நஞ்சினை அசைவு செய்தவன் என்பது தேவாரம் (581.3)

2. அடைத்தல் -உடைப்பு பள்ளம் ஆகியவற்றை முறையே அடைப்பதும் மூடுவதும் போல் வயிறுமுட்ட உட்கொள்ளல் அடைத்தலாம். கதவடைத்தல் போலவும், வழியடைத்தல் போலவும் (திருக். 38; புறம். 151) உணவு புகுவாய் முட்ட உண்பது எனினும் ஒப்பதே.

“புட்டவல் பட்டாணி பொரிதேங் குழலப்பம்

மட்டவிழும் தோசை வடையுடனே - சட்டமுடன்

ஓயாமற் சோறுகறி யுண்டையுண்டை யாய்அடைக்கும்” என்பதொரு தனிப்பாடல் (தனிப். 4:825)

3. அதுக்குதல் - வெதுப்பு மிக்க உணவை வாயின் இரு புறங்களிலும் மாறி மாறி ஒதுக்கித் தின்னல் அதுக்குதலாம். இனிப் பல்லும் பல்லும் பட அமுக்குப் பதம் பார்த்தலும் அதுக்குதலாம். கண்ணப்ப நாயனார் இறைவர்க்குப் படைக்க விரும்பிய ஊனைச் சுவை பார்த்ததைக் கூறும் சேக்கிழார், "வாயினில் அதுக்கிப் பார்த்து" என்பார். (பெரிய. கண். 178)

4. அதைத்தல் -அதைப்பு என்பது தடிப்பு, வீக்கம் என்னும் பொருள் தரும் சொல். கடைவாய் விம்முமாறு போட்டு ஒதுக்கித் தின்னுதல் அதைத்தல் என்பதாம்.(வ)