உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

5. அம்முதல் -குழந்தை தாயின் மார்பில் பாலருந்தல் அம்முதலாம். அம்மம் - மார்பு ; 'அம்மம்', குழந்தை யுணவு என்னும் பொருள் தரும் சொல்; குழந்தைக்குத் தாய்ப்பாலே இயற்கையுணவு ஆகலான்.

"அன்னே உன்னை அறிந்து கொண்டேன் உனக்கஞ்சுகன் அம்மந் தரவே”

என்பது நாலாயிரப்பனுவல் (பெரியாழ். 3).

பாலூட்டும் தாய் 'அம்மு அம்மு' என்று கொஞ்சிக் கொண்டே பாலூட்டுவது கண்கூடு.

6. அமுக்குதல் - இரண்டு இதழ்களையும் திறவாமல் வாயை மூடிக் கொண்டு தின்னல் ‘அமுக்குதல்' எனப்படும். சாக்கு அல்லது தாட்டில் பருத்தியைத் திணித்துத் திணித்து வைத்தலை அமுக்குதல் என்பது வழக்கு. எவருக்கும் தெரியாமல் எடுத்து முழுமையாய் விழுங்கிவிடுவதை அமுக்குதல் என்பதும் வழக்கு. "ஒரே அமுக்காக அமுக்கிவிட்டாய்" என்பதும், பெரிய “அமுக்கடிக் காரன்" என்பதும் வழக்கு. தெரியாமல் உண்பதைக் குறித்த இவ் வழக்கு, தெரியாமல் மறைக்கும் சூழ்ச்சியத்தை 'அமுக்கடி' எனக் குறிப்பதாயிற்று.

7. அயிலல் - அயிலல், அயிறல் என்பவை உண்ணுதலைக் குறிக்கும் சொற்கள். அயினுதல் என்றும் வழங்கும். பாலும்,பால் போலும் நீர்த்த உணவும் கொள்ளுதல் அயிலுதலாம். அயினி என்பது சோற்றையும், அயினி நீர் என்பது சோற்று நீரையும் குறிக்கும்.உருபால் அயிலுற்றிடு பொழுதத்தினில்" என்பது கந்தபுராணம். (சரவண. 33) "ஆன பல் கடல்களும் அயிறல் மேயினான்" என்பதும் அது (சிங். 27). "பால்விட் டயினியும் இன்றயின் றனனே" என்பது புறநானூறு (77).

8. அரக்கல் - அரக்குதல் என்பதும் அரக்கலேயாம். அரக்கல் என்பது அரைத்தலையும் முழுதும் உண்ணுதலையும் குறிக்கும் (ம.த.ச.அ). மரங்களில் இலைதழைகளை முழுவதுமாய் ஒட்ட வெட்டுதலை ‘அரக்கல்' என்பதும் 'அரக்க வெட்டுதல்' என்பது வழக்கு. அவ்வழியே முழுதும் உண்ணுதலைக் குறித்திருக்கலாம்.

9. அரித்தல் பூச்சி புழுக்கள் தின்னுதல் அரித்தல் எனப்பெறும்.

"கணச்சிதல் அரித்த" என்பது சிறுபாணாற்றுப்படை (133).