உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

90. மடுத்தல் - நிறைய உண்ணுதலும், நிறையக் குடித்தலும் மடுத்தலாம். மடுத்தல் உண்ணுதலை அன்றி உண்பித்தலையும் குறிக்கும் என்பதை "ஒண்டொடி மகளிர் மடுப்ப" என்பதால் புறநானூறு கூறும் (56). மண்டியிட்டுக் குனிந்து கை கூட்டி அள்ளிப் பெருக உண்ணுதல் மடுத்தலாம் என்பதைத் திருவிளையாடல் சுட்டும். (குண்.14).

91.மண்டுதல் - சுவை பாராமல் கண்ணை மூடிக்கொண்டு நிரம்பக் குடித்தல் மண்டுதல் என்பது வழக்கு. மண்டுதல் ஆவலாகப் பருகுதல், மிகக் குடித்தல் என்று சொல்லும் தமிழ்ச் சொல்லகராதி. "கண்ணை மூடி மண்டிவிடு" என்று குழந்தைகளை வலியுறுத்துதல் இன்றும் வழக்கே.

92. மாந்துதல்

தேக்கெறியுமாறும், புளிப்பு ஏப்பம் வருமாறும் நிரம்ப உண்ணுதல், குடித்தலுமாம் (பிங். 2000). உண்டு செரியாமல் அல்லது தொக்கமாய் இருத்தலை எடுத்தல் 'மாந்தம் எடுத்தல்' எனப்பெறும். "மாந்தி மாந்தித் துயின்று தானையெல்லாம்" என்பது இராமகாதை (உயுத். 4229).

93. மிசைதல் விருந்தினரைப் பேணி எஞ்சிய மிச்சிலை உண்ணுதல். "மிச்சில் மிசைவான்" என்பது திருக்குறள் (85) 'மிசைவு' என்பது 'உணவு' என்னும் பொருட்டது. ஆகலின், மிசைதல் உண்ணுதல் ஆயிற்று என்பதாம்.

“கலையுணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம் சிலைகெழு குறவர்க் கலகுமிசை வாகும்”

என்னும் புறப்பாட்டால் (236) மிசைவு உணவாதல் படும். "செங்கால் பலவின் தீம்பழம் மிசையும்" என்னும் நற்றிணை (232) உண்ணுதலைக் குறிக்கும்.

94. முக்குளித்தல் - மாடு தன் மூக்கைத் தொட்டியில் உள்ள நீர், ஊறல்,காடிநீர் இவற்றுள் செலுத்திக் குடித்தல் முக்குளித்தல் எனப்படும். முக்குளிக்கும்போது மூச்சுக் குமிழிட்டு நீருக்கு மேலே வரும்; முக்குளித்தல் ஒலியும் கேட்கும். தொட்டி நிரம்பி நீர் கிடந்தாலும் அடிமட்டத்தில் இருக்கும் கட்டிப் பொருளை முக்குளிக்கும் மாடு தின்றுவிடும். அத்தகையவற்றை ‘முக்குளிப்பான்' என்பதுண்டு. நீருள் மூழ்கி மூச்சடக்கி இருத்தலை முக்குளித்தல் என்பதும் கருதுக. முத்துக் குளித்தல் வழியாக வந்ததோ என்பது கருதத்தக்கது. இனி மொக்குள் என்பது நீர்க்குமிழைக் குறித்தலின் மொக்குளித்தல் என்பது திரிந்ததோ எனவும் கருதலாம்.