உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் சொல்வளம்

63

95. முழுங்குதல் - விழுங்குதல் என்பது முழுங்குதலாகத் திரிந்தது எனலாம். இரண்டற்கும் வேற்றுமை முழுங்குதல் என்பது முழுமையாக ஒன்றை விழுங்குவதைச் சுட்டுவதாகலாம். மலைமுழுங்கி மகாதேவன்' என்று சிலரை உவமையாகச் சொல்லுவது அறிக முழுமையில் இருந்து முழுத்தம் வந்தது போல, இதுவும் அமைதற்கு இடனுண்டாம். முழுக்காட்டுதல், முழுக்காளி (முத்துக் குளிப்பவன்) என்பவற்றையும் எண்ணலாம்.

96. மெல்லுதல் - வெற்றிலை முதலியவற்றைப் பல்லால் கடித்துத் தின்னல் மெல்லுதல் ஆகும். மெல்லல் என்பதும் அது மெல்லிலை மெல்லிய இலை என்னும் பண்பைப் குறிக்காமல் மெல்லுவதற்கு ஏற்ற இலையென வினையைக் குறிக்கும் என்பது சிந்தாமணி (2403). வெற்றிலையை மெல்லல் என்பதே மரபு என்பதை "வெற்றிலையை யுண்ண வென்றல் மரபன்மையின் என்றும்,"பாகு, பசிப்பிணி தீர நுகரும் பொருளன்மையின்' என்றும் நச்சினார்க்கினியர் இவண் குறித்தார்." 'குளிருக்கு ஏதாவது மெல்லேன்' என்று பயறுகளை வறுத்துக் கொடுத்தல் சிற்றூர் வழக்கு.

-

97. மேய்தல் ஆடு மாடு முதலியன புல் முதலியவற்றை மேலாகத் தின்னுதல். 'நுனிப்புல் மேய்தல்' என்னும் தொடர். மேய்தல் பொருளை விளக்கும். விலங்குண்ணுதலைக் குறிக்கும் மேய்தல், தீ எரித்தலையும் சுட்டும் என்பது 'வீட்டையும்தான் மேய்ந்தான்' என்னும் தனிப் பாடலால் புலப்படும். ஆடு மாடுகளை மேயச் செய்வாரை 'மேய்ப்பர்' என்பதும், கிறித்து பெருமான் தம்மை மேய்ப்பர் என்று கூறியதும், 'மேய்ச்சல் நிலம்' என நில ஒதுக்கீடு செய்வகையும் கருதத்தக்கன. முகில் கடலில் நீர் குடித்தலை 'கலங்கு தெண்டிரை மேய்ந்து' என இலக்கணை வகையால் கூறினார் திருத்தக்க தேவர். சிந்தா. 32.

98.மொக்குதல் - வாய் நிரம்ப அள்ளிப்போட்டுத் தின்னல் 'மொக்குதல்' எனப்படும். இது 'நொக்குதல்', 'மொதுக்குதல்' எனவும் வழங்கும். குதிரைக்குக் கொள் கட்டித் தின்ன வைக்கும் பையை 'மொக்குணி' என்பது உண்டென அறிதலின் (திருவாசகம், திருவிளையாடல்) அப் பைபோல உதப்பிய கன்னம் தோன்றுதல் கொண்டு மொக்குதல் என்னும் சொல் ஆகியிருக்கக் கூடும். மொக்குணி என்பது மொக்கை. பரியது என்னும் பொருளில் வழங்குதல் அறியத்தக்கது. முக்கல் என்பதற்கும் உண்ணுதற் பொருள் தரும் பேரகராதி.