உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

செந்தமிழ்ச் சொல்வளம்

71

22. கோலம் வரிவனப்பு உடையது. கோல் திரட்சி, வளைவு, திரட்சி,வளைவு, வரி என்னும் பொருள்களையுடையது. வீட்டின் வனப்பை முன்றில் கோலம் முன்னுரை போல விளக்குவதாம். அழகிய வளையல் அணிந்தாள் அன்மொழியால் கோல் வளையாதல் இலக்கண முறை. 'எழுதுவரிக் கோலத்தார்' என ஏடும் எழில் மகளும் இரட்டுறலால் இலங்குவர்.

23. சந்தம் - நறுமணம் சந்தமாம். சந்தம் அழகாவது, "சந்தம் மடிய வடிவான் மருட்டிய தாழ்குழலே" எனவரும் காரிகை விளியால் விளக்கமாம்.

24. சாயல் - தோற்றப்பொலிவுடையது. 'மயிலன்ன சாயல்' என்பர்.சாய்-சாயை- சாயல். வடிவ ஒப்பே சாயலாம். உருவும் நிழலும்போல்வதாகலின் சாயை சாயலாயது என்க.

-

25. சார், சாரு இவை அழகு சுட்டும் சொற்களாக நிகண்டாலும் அகரமுதலிகளாலும் அறியப்பெறுகின்றன. உளவியலுள் தனிச் சிறப்பினது 'சார்ந்ததன் வண்ணமாதல்' என்பது அழகுக்கு அத்தன்மை யுண்மை விளக்க வேண்டியது இல்லை. குற்றாலச் சாரலும் கொள்ளையருவிச் சூழலும் சார்ந்தார் ஒருவர் தம்மை மறந்து அவற்றின் வயத்தராதல் கண்கூடு. சார்ந்தார் களைப்பையும் கவலையையும் மாற்றிக் கிளர்ச்சியும் களிப்பும் நல்கும் அழகை சார், சாரு என்றது பொருந்துவதேயாம்.

26. சித்திரம் - தீட்டப்பெறும் வண்ணத்திலும் வரியிலும் வனப்புக்கொலுக் கொள்ளலின் அழகு சித்திரம் எனப் பெற்றதாம். சித்திர வேலைப்பாடு உடைய சிலம்பு சித்திரச் சிலம்பு எனப் பெற்றது. சித்திரம் ஆங்கு அழகுப் பொருள் தந்தது. ஓவியம் என்பது சித்திரத்துடன் ஒப்பக் கருதுக.

27. சிறப்பு - சிறப்புடைய பொருளில் அழகும் உண்மையால் அழகு சிறப்பு எனப்பெற்றதாம். அழகையும் புகழையும் தன்னகத்து அகப்படுத்திக்கொள்வது யாவது அஃது சிறைப்பாகிச் சிறப்பும் ஆயதாம். இறைப்பு, இறப்பு நோக்குக. ஏட்டைக்கட்டி இறைப்பிலே (இறப்பிலே) வை என்பது பழமொழி. ஐகாரம் அகரமாதல் மொழியியல்.

28. சீர் - செவ்விதின் அல்லது சீர்மையின் அமைந்தது. சீர்மை உடைய ஒருத்தி சீர்த்தி எனப்பெற்றாள். (மணிமே.) சீர்த்தி கீர்த்தியாய் வடமொழி வழக்குப் பெற்றது. "சீர்த்தி மிகு புகழ்" என்பது தொல்காப்பியம். மிகு புகழ் உடையது அழகுடையதுமாம்.