உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

காந்தியாரின் அழகு தனிப்பேரழகாயதும். அவர்தம் பொக்கை வாய்ப் புன்முறுவல் எவரையும் வயப்படுத்தியதும் அவர்தம் சீர்த்தியால் வாய்த்ததாம்.

29. செவ்வி-செவ்விதாக அல்லது தகவுற அமைந்தது.. அமைப்புச் செம்மை அழகுச் செம்மையாதல் வெளிப்படை. ஒன்று எவ்வாறு அமைய வேண்டுமோ அவ்வாறு அமைதல் செவ்விது. ஆகலின் எவர் உள்ளத்தையும் கொள்ளை கொள்வதாம்.

காண்பார்க்கு இன்பமும் நலமும் செய்யும் காலம் 'செவ்வி' எனப்பெறும். செவ்விது தன்மை தருவது, நேர்மையானது எனவும் பொருள் தரும். இவ்வெல்லாம் அழகுக்கும் உண்மை யின், செவ்வி எனப்பெற்றதாம். செம்மை வழிவந்த செவ்வையும் இவண் எண்ணத் தக்கதே.

30. செழுமை - செழுமை குலாவும் ஒன்றில் அழகுண்மை எவரும் அறிந்ததே. செழுமையற்ற ஒன்று செழுமையான ஓவியத்தும் பாவியத்தும் பயிலுங்கால் அழகுற இலங்குவது வெளிப்படை பாலைப்பாக்களில் காணும் சுவை அழகேயன்றோ!

31. சேடு - சே, சேண், சேடு என்பவை உயர்வு என்னும் பொருள் சுட்டுவன. செழுமைப் பொருள் போலவே, உயர்வுப் பொருளும் அழகேயாம். ஆதலால் சேடு எனப்பெற்றது அது. நரை திரை மூப்புக்கு ஆட்பட்ட அன்னையின் ஓவியம், உள்ளத்துச் சுரக்கும் உயரன்பால் தெய்வமாகத் திகழ்வது இல்லையா?

32. சொக்கு - சொக்க வைப்பது யாது? அதன் பெயர் சொக்கு. சோமசுந்தரரைச் 'சொக்கன்' என்றே குறிக்கும் நம்பி திருவிளையாடல். அச் சொக்கன் ஆட்டத்தில் சொக்கியவள் சொக்கியாம் உமையம்மை! கவர்வது, மையலூட்டுவது தூயது என்னும் பொருள் தரும் சொக்கு என்னும் சொல் அத் தகவால் அழகையும் சுட்டுவதாம்.

33. தகை; தகைமை தகவும், தகவாம் தன்மையும், தகையும் தகைமையுமாம்.அன்பு, அருள், ஒழுங்கு, பெருமை அமைந்தது அழகின்றி யமையுமோ? ஆகலின் தகையும், தகைமையும் அழகெனப்பெற்றன. இனித்தகவும் தகுதியும் அழகினவே என்க.

,

34. தளிமம் குளிர்ச்சி, திருக்கோயில், மழை, விளக்கு முதலிய பொருள் தரும் தளியின் அடியாகப் பிறந்த தளிமம் அழகுப் பொருளுக்கு உரிமை பூண்டதாம். உளத்திற்கு உவகையும் நிறைவும் தருவனவெல்லாம் அழகின் இருக்கையாகலின் தளிப் பொருளெல்லாம் அழகின் மூலமேயாம்.