உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

இளங்குமரனார் தமிழ்வளம்

37

அவநிலை சார்ந்தவராம்; தவத்தைப் போற்றுவார் சிவத்தைக் கைக்கொண்டவராம்; காமனை வெல்வார்க்குக் காலனும் அஞ்சுவான்; ஓகம் கடைப் பிடிப்பவனுக்கு மோகம் என்பது இல்லையாம்; முக்காலமும் உணர்ந்து பற்றற்ற துறவோர்க்குத் தனியழகு உண்டாகும்; ஐம்புலன்களையும் வெற்றிகொண்டவர் இறைவனைக் கண்டடைவர்; பொய்யாம் உடல் நிலையறிந்து மெய்ப் பொருளைப் போற்றுவோர் என்றும் மெய்யராகத் திகழ்வர்; யான் எனது என்னும் இருவகைப் பற்றும் அற்றவர் தெய்வநிலை யுற்றவராம்; அகப்பற்றும் புறப்பற்றும் அறவே தொடரார்க்குப் பிறப்பு என்பது இல்லை. பற்றற்றால் இன்பமும் பற்றுற்றால் துன்பமும் முழுமையாக வரும்.

12. அறிவுவிளக்கம் : (131-136)

குதம்பாய், பொய்யறிவு அகற்றி இறைவனை அடைதற்கு மெய்யறிவு வேண்டும்; பிறவியை ஒழித்தற்குப் பேரின்பத்தைக் கருதிய மெய்யறிவு வேண்டும்; தூய்மையே இறைவனாகக் காண்பது மெய்யறிவாகும்; உலகத்தைக் காணும் போதில் அதனைப் படைத்தவன் உண்டென்று கண்டு கொள்ள வேண்டும்; காமம் வெகுளி மயக்கமாகிய முக்குற்றமும் நீக்க முயலும் மெய்யுணர்வே சீரிய மெய்யுணர்வாகும்; மெய்ப்பொருள் ஈதே என்று மெய்யுணர்வு கொள்ளுதலே மெய்யான அறிவாகும். 13. சாதி வேற்றுமை இன்மை : (137-145)

குதம்பாய், ஆண்சாதி பெண்சாதி என்று சொல்வதை அல்லாமல் பிறப்பால் சொல்லப்படும் சாதிகள் எல்லாம் வீண் சாதிகளேயாம்; பார்ப்பாரை மேல் என்றும் பறையரைக்கீழ் என்றும் முடிவாகச் சொல்வது எவ்வறிவின் பாற்பட்டதோ? பார்ப்பாரைப் போலவே பறையரையும் முழுதொப்பாய்ப் படைத்தான் இறைவன்; பற்பல சாதிகளாகப் பகுத்துக் கூறுவ தெல்லாம் கற்பனையேயாம்; கட்டிவிட்ட சாதிப்பேர்கள் எல்லாம் கட்டுமானங்களே யல்லாமல் மெய்ம்மையொடு பொருந்திய வல்லவாம்; இறைவன் முதற்கண் படைக்கும் போது சாதிப்பிரிவு என்பதே இல்லை; சாதிகள் வேறு வேறு என்று பிரித்துப் பார்ப்பவருக்கு ஒளியும் கூட இருளேயாம்; நேர்மை தவறாத நெறியாளன் எவனோ அவனே சாதியில் உயர்ந்தோன்; சாதியும் இல்லை சமயமும் இல்லை என்பதைக் கல்வியாலும் இயற்கை உணர்வாலும் அறிந்து கொள்வாயாக.

-