உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குதம்பைச் சித்தர்

133

மெய்யுணர்வாளிக்கு விலக்குகள் எதற்காகவோ? 'அல்லல் என் செய்யும்' என்னும் அறிவுடன் இருப்பவர் ஏறிச் செல்லுதற்குப் பல்லாக்கு எதற்காகவோ? புலனடக்க (இயமம் முதல் எட்டு) ஓகநெறிகளை அறிந்த மெய்யறிவாளனுக்கு மேலுக்கு முட்டாக்கு எதற்காகவோ? அன்றி, ஒன்றோடு ஒன்று மறுதலையாம் தருக்கங்கள் எதற்காகவோ? தன் முனைப்பை அடக்கவல்ல மெய்யுணர் வாளனுக்கு ஓகநெறி எதற்காகவோ? தீக்குணங்களாம் படைகளை யெல்லாம் ஒருங்கே வெற்றி கொண்டு உயர்நிலையில் இருப்பவர்க்குப் பூவிருக்கை (மெல்லிய இருக்கை) எதற்காகவோ? விருப்பு வெறுப்புகளை யடியோடே தொலைத்து உயிரற்ற கட்டை போல் உலவும் மெய்யறி வாளனுக்குக் கையில் தாளக் கருவியும் எதற்காகவோ? பிறர் துயர்கண்டு உருக்கத்தாடு இருப்பவர்க்கு மகிழும் கொண்டாட்டங்கள் எதற்காகவோ? காலனை வெல்லும் வழி தெரிந்தவர்க்குப் புறக்கோலங்கள் எதற்காகவோ? உடற்குறும்பை ஒழித்துச், சினத்தைத் தொலைத்து உடலைச் சுக்காக வாட்டத் திறம் வாய்ந்தோர்க்கு உண்ணுகின்ற நிலைபேற்று மருந்துகள் (காயகற்பம்) எதற்காகவோ? மூலநீரையுண்டு (குண்டலிநீர்) முகட்டில் ஏற்றும் திறவோர்க்கு மற்றைத் தேங்காய்ப்பால் எதற்காகவோ? நீர்ச்சீலை மட்டும் சுற்றிக் கொண்டு பகலிலே திரிபவர்க்கு முக்காடும் எதற்காகவோ? உயிர்கள் மேல் இரக்கம் இல்லை; தன்னலத்தில் தவிர்தல் இல்லை; இவர்க்கு இறைப்பாடல்கள் எதற்காகவோ? தன்னையும் அறிந்து தலைவனையும் அறிந்து அவனை அடைந்தவர்க்கு மேலென்ன ஆசை வேண்டும்? இறைவனும் தானுமாய் இணைந்து விட்டவர்க்கு அதனினும் உயர்ந்தது (அல்லது தருக்கமிடல்) என்ன வேண்டும்? (எதற்காகவோ என்பது வேண்டுவது இல்லை என்னும் பொருட்டது.)