உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

இளங்குமரனார் தமிழ்வளம்-37

மறைநூல்களாம் முட்டாங்கம் வேண்டுவதில்லை என்பதாம். இதன் உட்பொருள் புரிவியல் வல்லானுக்குத் தெரிவியலால் ஆவது என்ன என்பதாம். (புரிவியல் - பிராக்டிகல்; தெரிவியல்- தியெரி)

முட்டாங்கம் மட்டுமோ முழுஞானிக்கு வேண்டா என்கிறார்? மந்திரநூல்,தந்திரநூல், ஆகியனவும் வேண்டா; இலையும் மலரும் தூவுதலும் தேங்காய் பழம் படைத்து வழிபடலும் வேண்டா; சிவிகையும் ஊர்தியும் முட்டாக்கும் வேண்டா; கொண்டாட்டம் இசைமுழக்கம், வேண்டா; தனித் திருத்தல், விலக்கூண் (பற்றியம்) சாவாவுடல் தேடல் இவை யெல்லாம் வேண்டா என்கிறார்.

வையெல்லாம் வேண்டாவா? என்று வினவுவார்க்கு மறுமொழியாக நூலின் நிறைவில்,

“பத்தாவும் தானும் பதியோ டிருப்பார்க்கு உத்தாரம் ஏதுக்கடி - குதம்பாய்

உத்தாரம் ஏதுக்கடி

55

என்பதன் வழியாக விடையிறுக்கிறார். உத்தாரம் என்பது மறுமொழி. பத்தாவாகிய தலைவனும் தானும் ஒன்றாகி இருப்பார்க்கு வினாவென்ன, விடையென்ன! 'சும்மா' இருக்க வேண்டுவது தானே! முற்றுணர்ந்தவர்க்குச் சொல்லியவற்றை மற்றைப்பொது நிலையர்க்கும் சொன்னதாகக் கொள்வதன் விளைவே பலப்பல தருக்கங்களுக்கு இடமாக இருப்பதாம். தன்னையே அறியத் தலைப்படாதவனுக்குப் பத்தாவும் தானும் பதியோடிருப்பவனுக்குச் சொல்லும் இயன்முறை ஏற்றுவருமா? பாலர் பள்ளிக்குள் கால்வைப்பவன், பண்டாரகன் ஆய்வைத் தலைப்பட்டுக் கருத்துக் கூறமுடியுமா?

எந்த நடைமுறையாயினும் சரி, ஒரு பாதியை எடுத்துக் கொண்டு மறுபாதியை எண்ணாது இருத்தல் அல்லது அப்புறப் படுத்திப் பார்த்தல் சீர்மையாகாது; செப்பமும் ஆகாது. ஆதலால் முழுதுணர் அறிவனுக்குரிய கடைப்பிடிகள் இவையென்றும், இவற்றைப் படிப்படியே பற்றிப் பிடித்துப் பரமேறவேண்டும் என்றும் கடைப்பிடியாகக் கொள்ளல் வேண்டுவதாம்.

குதம்பையர் எதிரும் புதிருமாக அல்லது முரண்தொடை படச்சொல்லுதலில் நனிவிருப்பர் என்பது புலப்படுகின்றது.