உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

3

வித்து என்று அறிந்து அறிவுறுத்தி நிலைபெறுத்துபவர் சித்தர்! தமக்கென உடைபற்றியோ உறைவிடம் பற்றியோ உறவு நிலை பற்றியோ ஒன்றும் கருதாமல், வெயிலோ மழையோ பனியோ காற்றோ இருளோ ஒளியோ காடோ மேடோ கருதாமல் தாம் கொண்ட போக்கிலே போய்க் கொண்டிருப்பது சித்தர் இயல்பு!

தாய்மையின் தனிப்பேரிரக்கம், குழந்தையின் கலங்கமிலா

உள்ளம், வெள்ளை, நகை, வீரனுக்கும் வீரனாக வீறுகாட்டிச் செல்லும் விழுப்பம், தம்மைக் கண்டு நகைக்கும் உலகத்தின் அறியாமையைக் கண்டு நகைக்கும் தெளிவு, இன்பம் துன்பம் பசி நோய் புகழ் பழி விருப்பு வெறுப்பு இன்னவற்றை யெல்லாம் ஒப்ப எண்ணும் ஒரு தகவு. அழுக்குடையை அவிழ்த்துப் போடுவது போலவும்,உண்ட இலையை எடுத்தெறிவது போலவும், பருகிய பதனீர் மட்டையை வீசி எறிவது போலவும், உடலை உகுப்பதற்குத் துளியளவுதானும் அசையாத உரம், தம்மைத் தம் கட்டுக்குள் வைத்திருக்கும் தனிப் பேராண்மை இவற்றின் முழுத்த வடிவமே சித்தர் வடிவமாம்!

உலகப் பழக்க வழக்கங்கள், சாதி சமயப் பிளவுகள், செல்வம் செல்வாக்கு மாயை பதவி பட்டச் செருக்கு, மண் பொன் மதிப்பு, பால் வயப்படு பான்மை இன்னவெல்லாம் மதிப்பு,பால் ஒன்றாத ஒரு திருவடிவம் சித்தர் வடிவம்! "ஈசனோடு ஆயினும் ஆசையற வேண்டும் என்னும் பற்றற்ற சித்தர், 'ஓடும் செம்பொனும் ஒப்ப நோக்குதல் பற்றியோ, 'வீடும் வேண்டா விறலில்' விளங்குதல் பற்றியோ விளம்ப வேண்டுவதில்லையாம்.

95

உலகப் பற்று அற்ற சித்தர்- தந்நலப் பற்று சற்றும் அற்ற சித்தர் -உலகத் துயர் கண்டு தனிப்பெருந் தாயாய்த் துடிக்கும் தகவாளர்! நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து, உயிர்கள் படும் துயரத்தை ஒழித்தலே கடமையாகத் தம் தலைமேல் அள்ளிப் போட்டுக் கொண்டு அலையாய் அலைந்து அரும்பணி செய்பவர்! பிணி தீர்க்கும் பணியில் அவர்கள் காட்டிய முழுத்திற முனைப்பே சித்த மருத்துவச் செல்வமாக இந்நாள் வரை திகழ்ந்து வருகின்றதாம்! தம் உடலையே கோயிலாக்கி, மூச்சையே வழிபாடாக்கி உயிர்கள் எய்தும் இன்பத்தையே தாமெய்தும் வீடுபேறாக்கி இறைமையே வாழ்வாகி என்றும் இருப்பவர் சித்தர்!

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உள்ளும் புறமும் ஒத்த ஒளிப் பிழம்பாம் சித்தர், மூச்சுப் பயிற்சியால் நாடி நரம்புகளின் துடிப்புகளையும் தம் வயத்தில் வைத்துக்