உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

இளங்குமரனார் தமிழ்வளம்-37 37

கொண்டிருப்பவர். வாழும் நாளை நீட்டித்து உயிர்தளிர்ப்பச் செய்தற்கும் வழிவகை அறிந்தவர். மூச்சை நிறுத்தி மூலநீரை வேண்டுமாற்றாண் ஏற்றவும் இறக்கவும் திறம்பெற்றதுடன் கட்டையாய் இருக்கவும், நீரில் கிடக்கவும், காற்றாய்ப் பறக்கவும் கூற்றைப் பிசையவும், கூடுவிட்டுக் கூடுபாயவும் திறம் பெற்றவர் என்னும் செய்திகள் அவர்தம் செயற்கரிய செய்கைகளின் விரிவுகளாம்.

மந்திர தந்திரங்களில் வல்லுநர் சித்தர் என்பதற்கு ஊரூர் தோறும் எத்தனை எத்தனை கதைகள்! கண்டவை என்றவை எத்தனை! கண்டதாய் உரைத்ததைக் கேட்ட கட்டுமானச் செய்திகள் எத்தனை! இரும்பு பித்தளை முதலியவற்றை வெள்ளியும் பொன்னுமாய்ச் செய்த விளையாடல் செய்திகள் எத்தனை! இவையெல்லாம் சித்தர் செல்வாக்கைச் சிற்றுணர் வோரும் ஒத்துக் கொள்ளுதற்கு வாய்த்தவை.

"சித்தர் கைபட்டால் தீராப்பிணியும் தீரும்! சித்தர் கண்பட்டால், கண்ணேறுகள் எல்லாம் கழியும்! அவர் மிச்சில் மிசைந்தார் விட்ட குறை தொட்ட குறை எதுவும் இல்லையாய் முற்று நிறைவாய்த் திகழ்வர்! ஏவல் செய்வினை முதலிய எல்லாமும் சித்தர் திருவடி பட்ட இடத்தே பொடியாய் ஒழியும்!" இவையெல்லாம் சித்தர்மேல் மக்களுக்கு எத்துணை நம்பிக்கை என்பதை எளிதாய் விளக்குவன.

சித்தர்கள் ஊர் பேர் உரைப்பது இல்லை; உறவும் இனமும் உரைப்பது இல்லை; ஓர் இடத்தின் உறவையும் நிலையாய்க் கொள்வது இல்லை; இலக்கிய இலக்கண ஆய்விலேயே காலங் கழிப்பதும் இல்லை; தேர்ந்த அறிவாளர் மையத்திலேயே வாழக்கருதியதும் இல்லை; உலக வாழ்வில் ஒட்டியும் ஒதுங்கியும், ஊடாடியும் அகன்றும் தாமரை இலைமேல் தண்ணீரென வாழ்ந்தனர்!

சிலர் பாவாகக் கருத்தைப் பொழிந்தனர்; சிலர் கைச் சைகையால் தெரிவித்தனர்; இன்னும் சிலரோ புன்முறுவல் ஒன்றே காட்டிப் போயினர்; நாளெல்லாம் பேசா நிலையில் பிறங்கினாரும் இருந்தனர். பாடியவர் கருத்து மட்டும் படிக்கக் கிடைத்துள்ளது! மற்றையோர் செய்திகள், கண்டவர் கேட்டவர் வழியே அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குறிப்புச் செய்தி களாய்க் கிடைத்துள