உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவவாக்கியர்

5

சித்தர் அடங்கிய இடங்கள் ஆங்காங்குண்டு. ஆங்காங்கு ஆண்டுதோறும் நினைவு விழாக்கள் உண்டு. நாள் வழிபாடு கூட்டு வழிபாடு என்பவையும் உண்டு. படையலும் பொங்கலும் பாலிப்பதும் உண்டு! இக்கால முறைப்படி பொழிவுகளும் நிகழ்வது உண்டு. ஆயினும் சித்தர் நெறிகளை ஏற்றுப் போற்றுதல் பெரிதும் இல்லை! மற்றை வழிபாடுகள் போலவே நூற்றொடு நூற்றொன்றாய்ப் பூசை போடும் அளவில் புகழ்பாடும் அளவில் - அமைந்து விடுகின்றது.

சித்தர்கள் என்றும் இருந்துளர் எங்கும் இருந்துளர்; எவ்வெக் குடி வழிகளிலும் இருந்துளர். அவர்கள் இறைமையைத் தம்மிடத்துக் கொண்டவர்; வீட்டின்பத்தைத் தம் கூட்டகத் லேயே கண்டவர்; மக்கள் அனைவரையும் உய்விக்க வழி காட்டியாக வந்தவர்; எல்லா அறிவு நிலைகளுக்கும், மெய்ப் பொருள் இயல்களுக்கும், சீர்திருத்தங்களுக்கும் புரட்சிகளுக்கும் அப்பாலுக்கு அப்பாலாய் நின்று அவற்றுக்கெல்லாம் மூல வைப்பகமாகத் திகழ்ந்தவர். அதனால்தான் இறைவனையும் சித்தராகக் கண்டது இந்த மண்! இறையருட்பேறாம் வீடு பேற்றையும் சித்த நிலை அல்லது சித்தியாகக் கண்டது இந்த

மண்!

"சித்தர் நெறி நடைமுறையில் உள்ளதா? நடைமுறைப் படுத்தப்பட்டுவிட்டதா? நடைமுறைப் பட்டால் அங்கே, இங்கே காலூன்றிய சமயங்களுக்கு என்ன வேலை! வேற்றுச் சமய நாட்டத்திற்கு என்ன வேலை! சித்தர் நெறி இல்லை! பித்து நெறிகள் பெரும் பறை கொட்டுகின்றன" என்றார் ஓருண்மைக் கிறித்தவர்! அவர் பற்பல சமய உட்கிடைகளையும் உணர்ந்தவர்! காழ்ப்பற்ற பொதுநோக்கில் நோக்கி உண்மை உரைத்தார். ஆனால் கையிற் கிடைத்த கனிகளை விடுத்துக் காய் கவர்ந்து திரிதல் நமக்குக் கைவந்த கலையாயிற்றே!

சித்தர்கள் எத்தனை பேர்?

'பதினெண் சித்தர்' என்பதொரு கணக்கு. ஒரு காலத்தில் ஓரோர் எண்ணுக்கு மதிப்பு; செல்வாக்கு! ஏன்? காதல் என்று கூடச் சொல்லலாம்!

பதினெண் மேல் கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு, பதினெண் புராணம், பதினெண் உபபுராணம், பதினெண் பாடை (மொழி). பதினெண் மிருதி, பதினெண் வேள்வி, பதினெண் கணம்! இப்படிப் பல பதினெட்டுகள்! அப்படி ஒன்று பதினெண் சித்தர்!