உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞானபோதம்

187

எனல் பண்டு தொட்டுவந்த வழக்காதலின் அம்முறையே முறையாய்ச் சொல்லப் பெற்றதாம்.

எனும் அவை :

'அவன்' என்றும் 'அவள்' என்றும் 'அது' என்றும் சொல்லப்படுகின்றவை எவை? அவை, 'அவை'யாகின்றன! அது பலவாகிய அவையா இவ்வவை! இல்லை! உயர்திணையை அஃறிணைக்குரிய அவையாக்கிக் கூறுவரோ, அறிவறிந்தோர்? இவ்வவை, 'கூட்டம்' என்றும் பொருள்தரும் அவையாம். அவையும் அவைத் தலைவரும் இந்நாளில் பெருக வழங்கு கின்றனர். ஆனால் மெய்கண்டார் காலத்தும் அவை உண்டோ?

மெய்கண்டார் காலத்தில் என்ன? மெய்கண்டார்க்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த தொல்காப்பியனார் அருளிய தொல்காப்பிய நூல், 'நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்துத் தானே' அரங்கேறிற்று. அதங்கோட்டாசான் அல்லரோ அவைத் தலைவராகத் திகழ்ந்தார்! நிலந்தரு திருவிற் பாண்டியன் அல்லனோ அவையத்தைக் கூட்டுவித்தான்! கழக நூல்களெல்லாம் சான்றோர் அவைக்கண் அல்லவோ ஆராயப்பெற்றன! மூவர் முதலிகளும் ஆழ்வாராதி களும் திருக்கூட்டத்தார் தொடரவன்றோ பாமழை பொழிந்து பண்ணோடு இசைத்துப் பைந்தமிழ் வளர்த்தனர்! இவற்றை அறிவார் 'அவை' புதியது என்றோ புதிய பொருளது என்றோ கொள்வரோ?

அவை, தானே கூடுமோ? கூடாது! கூட்டக்கூடும்; கூட்டுவார் ஒருவர் இருந்து கூட்டுவார்; அவர் கூட்டக்கூடும்! ஒருமுறை மட்டும் கூடுமா? பலமுறை கூடுமா? எடுத்த பொருளாய்வு முடிவுறும் அளவும் கூடும். அதற்கு ஒரு முறையும் போதும்! ஒன்பது முறையும் வேண்டும்! எடுத்துக்கொண்ட பொருளையும், எடுத்துக்கொண்டு ஆய்வார் நிலையையும் பொறுத்தது அது. இந்த உலகமும் ஓரவையே! அதுவும் இறையால் கூட்டக் கூடுகிறது; கூடி ஆய்கின்றது; ஆய்வு முடிந்ததும் அடையும் இடத்தை அடைகின்றது. அவையைக் கூட்டி ஆய்ந்து நிறை விப்பார் அவைத் தலைவர்; உலகைக் கூட்டி நிகழ்த்தி நிறைவிப்பார் இறைவர். 'அவை' என்னும் உவமையால் மெய்கண்டார் சுட்டும் பொருள் இதுவாம்.