உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

இளங்குமரனார் தமிழ்வளம் - 37

இன்றி நிற்கும் என்றார். இறைவனே ஆணையை நீங்காமல் நிற்பான் என்பதாம்.

நீக்கம் இன்றி நிற்றல் என்பது எப்படி? தேன் வேறு இனிமை வேறு எனப் பிரிக்க முடியாதவாறு நிற்றல் நீக்கம் இன்றி நிற்றலாம். செந்தாமரைப் பூவின் செம்மை நிறம் வேறுபடுத்த முடியாதவாறு ஒன்றியிருத்தல், நீக்கம் இன்றி நிற்றலாம். பண்பும் பண்புடையதும் ஒன்றாகி இருப்பதுபோல் இறையும் திருவருளாணையும் என்றும் ஒன்றியுடனாகி இருத்தல் நீக்கம் இன்றி நிற்பதாம்.

அன்றே :

அன்றே என்பதற்கு 'ஆமே' என்பது பொருளாம். அல்லையாம் என்னும் பொருள் அதற்கு இங்கு இல்லையாம். 'அசைநிலை' என்று சொல்லி அமையும் பொருளும் அதற்கு இங்கு இல்லையாம். ஆமே என்னும் பொருளே அதற்கு இங்குக் கொள்ளல் சால்பு!

“வென்றி வேந்தன் பணிப்பவும் பணிப்பின்றியும் சென்றிகன்முனை ஆதந் தன்று”

என்பது முதலாகப் புறப்பொருள் வெண்பாமாலையில் வரும் கொளுக்கள் எல்லாவற்றிலும் ஆளப்பெறும் 'அன்று' என்பதற்கு 'ஆம்' எனும் பொருளுளதாதல் அறிந்துகொள்க.

ஆக, இக்கருத்துகள் எல்லாமும் அடங்க,

“அவையே தானே ஆயிரு வினையின்

போக்கு வரவு புரிய ஆணையின் நீக்கம் இன்றி நிற்கும் அன்றே”

என நூற்பா இயற்றினார் மெய்கண்டார்.

இறைவன் உயிர்களேயாயும், உயிர்களுக்கு வேறாகியும், உயிர்களுக்கு உயிராம் தன்மையால் உடனாகியும், உயிர்கள் தம் இருவினையின் காரணமாக இறத்தலும் பிறத்தலும் செய்யத் தன் ஆணையினின்றும் பிரிவின்றி என்றும் நிற்பன் என்பது இதன் பொழிப்புப் பொருளாம்.

இந்நூற்பாவின் பொருளருமையில் தோய்ந்து தோய்ந்து இன்புற்ற பேராசிரியர் ஔவை. சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் ஓர் எடுத்துக்காட்டால் விளக்கும் அருமை தனிப் பேரின்பம் பயப்பதாகும்.