உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவஞானபோதம்

201

"அந்தமும் ஆதியுமாகும் போது வேறாய் நிற்பதும், உயிரியல் பொருளாகிய உலகியற் பொருள்களோடு ஒன்றாய் நிற்பதும் உயிர்களோடு உடனாய் நிற்பதும் உணர்த்த வந்த திருஞான சம்பந்தப் பெருமான்,

‘ஈறாய் முதல் ஒன்றாய்இரு பெண்ணாண்குண மூன்றாய் மாறாமறை நான்காய் வரு பூதம்மவை யைந்தாய் ஆறார் ஏழோசையோ டெட்டுத்திசை தானாய் வேறாய்உட னானான்இடம் வீழிம்மிழ லையே’

என்று அருளிச் செய்துள்ளார். வேறாய் நின்று அந்தமும் ஆதியுமாம் திறத்தை, 'வேறாய் ஈறாய் முதலாய்' என்றும் ஒன்றாய் நின்று உலகியற் பொருள்களை இயக்கும் திறத்தை ஒன்றாய் இரு பெண்ணாணாய் குணமூன்றாய் மறைநான்காய் பூதமவை யைந்தாய் ஆறார் சுவையாய் ஏழோசையாய் எட்டுத் திசைதானாய்' என்றும், உயிர்களோடு ஒன்றாகாமலும் வேறாகாமலும் உடனிருந்து கண்டும் காட்டியும் உதவியருளும் முதல்வன் திறத்தை 'உடனானான்' என்றும் இத்திருப்பாட்டில் திருஞான சம்பந்தப் பெருமான் அருளிச் செல்கின்றார். இவ்வாறு இறைவனது மூவகை நிலையினையும் திருவருளால் உணர்ந்து ஒருங்கே எடுத்து ஓதிய நூல் வடமொழியிலோ வேறு மொழி களிலோ இதுகாறும காணப்படவில்லை!'

தமிழர் சமயப் பிழிவு சிவஞான போதம் என்பதற்கு இத்தகைய இறையருள் பாடல்களைக் காட்டிலும் வேறு சான்றும் வேண்டுமா?