உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 37.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் நூற்பா

உயிரைப் பற்றிய ஆய்விலே தொல்பழந்தமிழர் ஊன்றி ஈடுபட்டிருந்தனர் என்பது தொல்காப்பியத்தால் நன்கு தெளிவா கின்றது. செடி கொடி மரங்களுக்கு உயிர் உண்டு, உணர்வுண்டு என அறிவியல் அறிஞர் சகதீச சந்திரபோசு கருவிகள் கொண்டு மெய்ப்பித்துக் காட்டினார். ஆனால், அவர் கண்டுபிடித்ததற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழறிஞர்களால் கண்டுபிடிக்கப்பட்டு நாடறிந்த செய்தியாக விளங்கியது.

'உயிர்' என்னும் பெயர், 'உய்ப்பது உயிர்' என்னும் விளக்கம் தருவதாம். உய்த்தல் என்பது செலுத்துதல், இயக்குதல் என்னும் பொருட்டது.உயிரிலா உடல் இயக்கமற்றது என்பதை உவரே அறியார்? 'செத்தாரைச் சாவார் சுமப்பார்" என்பதை எவரே உணரார்? இயக்கும் உயிர், உய்வுக்கும்-கடைத்தேற்றத்திற்கும்- வழிகாட்டும் என்றும் முந்தையோர் கண்டிருந்தனர். அவர்கள் உயிரை ஓரறிவுயிர் முதலாக ஆறறிவுயிர் இறுதியாகப் பகுத்துக் காட்டினர். இவை இவை ஓரறிவுயிர், இவை இவை ஈரறிவுயிர் என்றும் நிலைப்படுத்தியிருந்தனர். மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளும், ஐயறிவுகளுக்கும் இடமானவை என்றும் மனம் ஆறாம் அறிவுக்கு இடமானது என்றும் தெளிந்திருந்தனர். அதனால்

“மாவும் மாக்களும் ஐயறி வினவே”

என்றும்,

"மக்கள் தாமே ஆறறி வுயிரே”

என்றும் சுட்டினர். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பவற்றின் வகையறிந்தார் வழியாகவே உலகம் இயல்கின்றது என்று தெளிந்தனர். ஓர் உயிர்மேல், மற்றோர் உயிர் செலுத்தும் அன்பாலும், அரவணைப்பாலும், உற்ற போது உதவும் உதவி யாலும் உயிர் தளிர்ப்புறும் என்றும் உணர்த்தினர்! இவற்றையும் தமக்கு முன்னே இருந்த மூதறிஞர்கள் கண்டு தெளிந்து உரைத்த தாக 'நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே' என்றும் குறித்தனர்.